.

Home » » பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்குமாறு கூட்டமைப்புக்கு இந்தியா மிரட்டல் !

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்குமாறு கூட்டமைப்புக்கு இந்தியா மிரட்டல் !


இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு குறித்து ஆராய்வதற்காக, அரசாங்கத்தால் அமைக்கப்படவுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க வேண்டுமென இந்திய அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருவதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து இந்திய தூதரக அதிகாரிகள் இரண்டுதடவை கூட்டமைப்பின் தலைவரை சந்தித்து கலந்துரையாடியதாகவும் அதன் போது பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம்வகிக்க வேண்டுமென இந்திய தூதரக அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், மேற்படி இந்திய அதிகாரிகளின் கோரிக்கையை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மறுத்துள்ளதுடன் இந்திய அரசாங்கத்தின் உயர்மட்டம் ஊடாக தமிழர்களுக்கான நியாயமான தீர்வு குறித்து உத்தரவாதம் அளிக்கப்பட்டால் மாத்திரமே பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பது குறித்து பரிசீலிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையிலேயே கூட்டமைப்பின் இந்திய விஜயமும் அமையவுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணாவிடம் பாராளுமன்ற தெரிவுக்குழு மூலமே இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து பேச முடியுமெனவும் அதனால் கூட்டமைப்பு கட்டாயம் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம்வகிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி இலங்கை அரசின் நிலைப்பாட்டை கிருஸ்ணாவுடன் இணைந்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஊடகவியலாளர்களுக்கு ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், இலங்கையின் நிலைப்பாட்டை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அழுத்தங்களையும் பிரயோகித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சர்வதேச நாடுகளின் ஆலோசனைகளை புறந்தள்ளிச் செயற்படுவது கடந்தகால கசப்பான அனுபவங்களை மீண்டும் தமிழர்களுக்கு உருவாக்கிவிடுமோ என்று கூட்டமைப்பின் தலைமை அஞ்சுவதாகவும் குறிப்பாக இந்தியாவை மீறி செயற்படுவதால் இந்திய அரசு தமிழர் தரப்பை புறக்கணிக்கக் கூடும் எனவும் கூட்டமைப்பு கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவின் ஆலோசனைகளுக்கு ஊடாக தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதே ராஜதந்திர நகர்வாக அமையும் அதனையே சர்வதேச நாடுகளும் விரும்புவதாக கூறப்பட்டுள்ளது.
எனவே எதிர்வரும் இந்திய விஜயத்தின் பின்னரோ அல்லது முன்னரோ தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம்வகிக்கும் என எதிர்பார்க்கலாமென சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved