மார்ச் 8ஆம் திகதியன்று வவுனியா மற்றும் மன்னாரில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தினரால் ஐ.நா. உரிமைகள் மாநாட்டிற்கு எதிராக கையெழுத்து வேட்டை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டு உள்ளதாகவும் இதனைக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இக் கோரிக்கையை வலியுறுத்தி செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் வினோநோகராதலிங்கம் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தினரால் 'தாய்நாட்டிற்கு எதிரான வெளிநாட்டு சக்திகளைத் தோற்கடிக்கும் மக்கள் ஆவணம்;' என்னும் தொனிப்பொருளில் ஜெனிவா மனித உரிமை மாநாட்டுக்கு எதிராக நாளை (08.03.2012) முதல் கையெழுத்து வேட்டை மேற்கொள்ள முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்காக வவுனியா, மன்னார் மாவட்டங்களின் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் பணிப்பாளர்கள் தமது உத்தியோகத்தர்களுக்கு ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் குறைந்தபட்சம்
5000 கையெழுத்துக்களையாவது வாங்க வேண்டும் என்றும் இது மேலிடத்தின் உத்தரவு என்றும் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கூடும் இடங்களான கடைவீதி, பேருந்து நிலையம், கச்சேரி மற்றும் பிரதேச செயலக அலுவலகங்கள், தொடருந்து நிலையங்கள் இன்னபிற இடங்களில் கையெழுத்து வேட்டையை மேற் கொள்ளுமாறும் இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர்கள் பணிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விடயத்தினால் அந்த ஊழியர்களும் மனவேதனை அடைந்துள்ளனர். இளைஞர் சேவை மன்றத்தில் பணிபுரிபவர்கள் இளைஞர் நலன்சார்ந்த பணிகளுக்காகவே பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களை வேறு தேவைக்குப் பாவிப்பதும், குறிப்பாக தமிழ் மக்களுக்கு எதிராக தமிழ் மக்களிடமிருந்தே பலவந்தமாகக் கையெழுத்து வாங்குவது என்பதும் சட்டவிரோதமானது என்பதுடன், பாரிய மனித உரிமை மீறலுமாகும். இந்த அரசிற்கு ஜெனிவாவில் நடைபெறுகின்ற மாநாட்டின் மூலம் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இத்தகைய நடவடிக்கைகள் ஒருபோதும் பலனிக்காது.
கடந்த வாரம் இதனைப்போன்றே அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அவசர அவசரமாக ஒரு உத்தரவு பிரப்பிக்கப்பட்டு மாவட்டங்களில் உள்ள பிரதேச செயலகங்களினூடாக பல்வேறு ஆசைவார்த்தைகள் காட்டி பிழையான முறையில் மக்களை அழைத்துவந்து ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் செயலை விருப்பின்றியே பெரும்பாலான அரசு ஊழியர்களும் செய்துள்ளனர். இச்செயல் அரசு ஊழியர்களின் சத்தியப்பிரமாணத்தை அரசே மீறவைக்கின்ற செயல் என்பதையும், இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் ஜனநாயகவிரோத மனிதஉரிமை மீறிய செயல் என்பதையும் நாங்கள் இங்கு பதிவு செய்ய விரும்புகின்றோம். நீதியானதும் நியாயமானதும் நிலைத்து நிற்கக்கூடியதுமான அரசியல் தீர்வும் முறையான விசாரணைகளுமே இந்த அரசை நெருக்கடிகளிலிருந்து மீட்டெடுக்கும் என்பதை நாங்கள் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
பணிப்பாளர்களின் கையெழுத்து வேட்டைக்கான உத்தரவு இளைஞர்களிடையே அதிருப்தியைத் தோற்று வித்துள்ளதுடன் விசனத்திற்கும் ஆட்படுத்தியுள்ளது. தனது கையைக் கொண்டே தனது கண்களைக் குத்தும் அரசின் சூழ்ச்சியை இளைஞர்களும் உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் நன்கு உணர்ந்திருக்கின்றார்கள்.
ஆகவே எமது மக்கள் உங்களது 'தாய்நாட்டிற்கு எதிரான வெளிநாட்டுச் சக்திகளைத் தோற்கடிக்கும் ஆவணத்தில்' கையெழுத்திட மாட்டார்கள் என்பதை இந்த அரசாங்கத்திற்குத் தெரிவித்துக் கொள்கின்றோம். எமது மக்களும் இதுவிடயத்தில் மிகவும் அவதானமாகச் செயற்பட்டு எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் எதுவித ஆசைவார்த்தை காட்டினாலும் அதில் மயங்கி கையெழுத்திடாமல் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம். இவ்வாறு அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
