.

Home » » மன்னாரில் கத்தோலிக்க குருக்களுக்கு அவசர பொலிஸ் அழைப்பாணை

மன்னாரில் கத்தோலிக்க குருக்களுக்கு அவசர பொலிஸ் அழைப்பாணை


தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் வேலைவாய்ப்பு மற்றும் காணி இழுபறிகள் போன்றவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் நோக்கிலும், மன்னார் ஆயருக்கு எதிராக அமைச்சர் ஒருவர் தெரிவித்த அநாவசியமான குற்றச்சாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மன்னார் மறைமாவட்ட குருக்கள் எதிர்ப்பு நிகழ்வொன்றை நடாத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நிகழ்வை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவரும் நிலையில், மன்னார் கத்தோலிக்க குரு முதல்வர் உட்பட ஐந்து குருக்களை மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு திடீர் பொலிஸ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் ஆயர் ஏற்கனவே சிறீலங்கா அரச புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களால் அநாவசியமாக விமர்சிக்கப்பட்டுள்ளார்.

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள கட்டுக்காரன் குடியிருப்பு கிராமத்தில் உள்ள மன்னார் ஆயர் இல்லம் மற்றும் அப்பகுதி மக்களுக்குச் சொந்தமான சுமார் 600 ஏக்கர் காணியை இந்த அமைச்சரின் சகோதரர் ஒருவர் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததும் அண்மையில் செய்தியாக வெளிவந்திருந்தது.

அத்துடன் குறித்த காணிக்கான ஆவணத்தை மன்னார் பிரதேச செயலகத்தில் கொண்டுவந்து சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளால் கோரிக்கை விடப்பட்டது. குறித்த காணி அபகரிக்கப்படுகின்றமை தொடர்பில் மன்னார் ஆயர் உள்ளிட்ட குறித்த கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் தலைமன்னார் பொலிசில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில், மன்னார் மக்கள் மத்தியில் அவசியமற்ற குரோத உணர்வைத் தூண்டி, காணி அபகரிப்பையும் ஆயர் இல்லத்தின் தலையீட்டையும் தவறாகப் பிரச்சாரம் செய்து, பல சிறிய கிராமங்களிலும் வாழும் கத்தோலிக்க மக்களுக்கிடையில் முறுகல் நிலையை இந்த அமைச்சர் திட்டமிட்டு உருவாக்கி வருவதாக அப்பகுதி நலன்விரும்பிகளும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு பொலிசாரால் உத்தரவிடப்பட்டுள்ள ஐந்து கத்தோலிக்க குருக்களும் நாளை வெள்ளிக்கிழமை 25ஆம் திகதி காலை 9 மணிக்கு நீதிமன்றில் சமூகமளிக்கும்படி எழுத்தில் கோரப்பட்டுள்ளனர்.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved