.

Home » » 24 தண்டனை புள்ளியை பெற்றால் சாரதி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்!- இலங்கையில் புதிய நடைமுறை

24 தண்டனை புள்ளியை பெற்றால் சாரதி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்!- இலங்கையில் புதிய நடைமுறை


தவறு விடும் சாரதிகளுக்கு “தண்டனை புள்ளி'' வழங்கும் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ள இலங்கையின் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம இரண்டு வருடங்களில் 24 தண்டனை புள்ளிகளை பெற்றால் அந்த சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரம் ஒரு வருடத்திற்கு இடைநிறுத்தி வைக்கப்படும் என்றும் அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகளை சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
பொது மக்கள், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சாரதிகளின் தரமான சேவையை கவனத்தில் கொண்டே இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் தவறிழைக்கும் சாரதிக்கு தண்டனை புள்ளி வழங்கப்படும். அந்த சாரதி 2 வருடங்களில் 24 தண்டனை புள்ளியை பெற்றால் அவரது சாரதி அனுமதிப்பத்திரம் ஒரு வருடத்திற்கு இடைநிறுத்தி வைக்கப்படும்.
ஒரு வருடத்திற்கு பின்னர் அந்தச் சாரதி அனுமதிப்பத்திரம் எவ்விதமான கட்டண அறவீடும் இன்றி மீளக் கையளிக்கப்படும்.சாரதிகள் 18 தண்டனைப் புள்ளிகளை பெறுகின்ற வேளையில் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும்.
புதிதாக சாரதி அனுமதிப்பத்திரத்தை பெறுகின்றவர்களுக்கு ஒருவருடம் நன்னடத்தை காலம் வழங்கப்படும். அந்த ஒரு வருட காலத்திற்குள் 6 புள்ளிகளை பெற்றால் அவரது சாரதி அனுமதிப்பத்திரம் ஒரு வருடத்திற்கு இடைநிறுத்தி வைக்கப்படும்.
அவ்வாறு இடை நிறுத்தி வைக்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரம் இரண்டாவது வருடத்தில் மீளவும் கையளிக்கப்படும்.
இரண்டாவது வருடத்தில் தண்டனை புள்ளி பெற்றால் சாரதி அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படும்.
மக்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டே இந்த நடைமுறை அமுல்படுத்தப்படவிருக்கிறது என்பதுடன் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனத்தை செலுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் நீதியமைச்சுடன் கலந்துரையாடப்படுவதுடன் சிறைத் தண்டனை வழங்கும் வகையிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved