இரத்தினபுரி கஹாவத்தையில் சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு பிரபல அரசியல்வாதி ஒருவர் அடைக்கலம் வழங்கியுள்ளார்.
தாய் மற்றும் மகளை மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்த நபர்களுக்கு குறித்த அரசியல்வாதி பாதுகாப்பு வழங்கியிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அரசியல்வாதியின் தலையீடு காரணமாக சந்தேகநபர்களை கைது செய்வதில் பொலிஸார் நெருக்கடிகளை எதிர்நோக்கியதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்த இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நீண்ட காலமாக போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், இதற்கு அரசியல்வாதி ஆதரவளித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஆளும் கட்சி பிரதேச சபை உறுப்பினர் தர்மசிறி என்பவரின் சகோதரரான ராஜூ என்பவரை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தர்மசிறி என்ற பிரதேச சபை உறுப்பினர் பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் ஜோன் செனவிரட்னவின் இணைப்பதிகாரியாக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து தர்மசிறி இணைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக அமைச்சர் செனவிரட்ன அறிவித்திருந்தார்.
பல குற்றவாளிகள் பிரதேச ரீதியான தேர்தல்களில் போட்டியிட்டு அதன் மூலம் பாதுகாப்பைத் தேடிக்கொள்ள முயற்சிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
