3 படத்தில் உள்ள "கொலவெறி..." பாடல் மூலம் உலகப்புகழ் பெற்ற நடிகர் தனுஷ், இந்தபடத்திற்கு அடுத்தபடியாக இந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறார். அதற்கு அடுத்து பரத்பாலா இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில வருடங்களுக்கு முன்னர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், கமல்ஹாசனை வைத்து 19-த் ஸ்டெப்(19th Step) என்ற பெயரில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டு இருந்தார் பரத்பாலா. தற்காப்பு கலை, கேரளாவில் இருந்து எப்படி ஜப்பான் வரை சென்றது என்பதை மையப்படுத்தி இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த கதையை பிரபல மலையாள எழுத்தாளர்கள் எம்.டி.வாசுதேவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோர் அமைத்து இருந்தனர். இப்படம் எப்போது ஆரம்பிக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் சில பல காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் பரத்பாலா இப்போது மீண்டும் இந்தபடத்தை இயக்க ஆர்வம் காட்டி வருவதாகவும், அதில் கமலுக்கு பதிலாக தனுஷ் ஹீரோவாக நடிப்பதாகவும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஏ.ஆர்.ரஹ்மான் தமிழில், பரத்பாலா படம் உள்ளிட்ட நான்கு படங்கள் கைவசம் இருப்பதாக கூறியிருந்தார். அதனால் அந்தபடம் 19-த் ஸ்டெப்(19th Step) ஆக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
