பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசியின் மாளிகையில் காவலுக்கு நின்றுகொண்டிருந்த பெண் காவலர் மீது ஜனாதிபதியின் 14 வயது மகன் லூயிஸ் சர்கோசி பளிங்குக் கற்களை வீசினார்.
ஜனாதிபதி சர்கோசியின் மகன் லூயிஸ் அவருடைய தாயுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். கடந்த வியாழனன்று பிரான்சுக்கு வந்த லூயிஸ், ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் தனது நண்பர்கள் இருவரோடு விளையாடினார்.
அப்போது ஜனாதிபதி மாளிகையின் வாசலில் காவலுக்கு நின்றிருந்த பெண்காவலரின் காலுக்கு அருகே திடீரென்று ஒரு கல்லும் பின்பு நுழைவாயிலில் ஒரு தக்காளியும் வந்து விழுந்தது. திரும்பிப் பார்த்த காவலரின் கன்னத்தில் ஒரு சிறு கல் பட்டது.
இதனையடுத்து ஜனாதிபதி வாய்மொழியாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டதால் காவலர் புகார் எதுவும் அளிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி சர்கோசி பதவி ஏற்றது முதலே அவரது மூன்று மகன்களும் தந்தைக்கு ஏதேனும் ஒருவகையில் தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருக்கின்றனர்.
ஜனாதிபதியின் மூத்த மகன் 26 வயது பியர் சர்கோசி, தனது தந்தை உக்ரைனிலிருந்து வந்த ஆடம்பர ஜெட் விமானத்தில் தனக்கு வயிறுவலி என்று பொய்சொல்லி பயணம் செய்தார். இவரது பயணச்செலவு மட்டும் 40,000 யூரோ என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இரண்டாவது மகனான 25 வயது ஜுன் சர்கோசி, சட்டம் பயின்றவர் என்பதால் வர்த்தக மாவட்டமான லா டிஃபென்சாவின் தலைவராக்க ஜனாதிபதி முயற்சி செய்து வருகின்றார்.
ஜனாதிபதி சர்கோசி அடுத்தமுறையும் ஜனாதிபதியாகப் போராடி வரும் இந்த சூழ்நிலையில் அவரது மகன் செய்த இந்தச் செயல் அவருக்குப் பிரச்னையை ஏற்படுத்தக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

