முல்லைத்தீவு - கொக்கிளாய் பகுதியில் இல்மனைட் பிரித்தெடுக்கும் தொழிற்சாலைக்கான நிலம் கையகப்படுத்தலில், பொதுமக்களிற்க்குச் சொந்தக் காணி சுமார் 15ஏக்கருக்கும் மேல் எடுக்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ள பிரதேச மக்கள், எந்தவித அறிவிப்புமின்றி தொழிற்சாலை அமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.முல்லைத்தீவு – கொக்கிளாய் ஆற்றை அண்டியுள்ள பகுதியில் இல்மனைட் படிக மணல் உள்ளமை தொடர்பில், 3மாதங்களுக்கு முன்னர் அப்பகுதிக்கு வந்த நிபுணர்கள் ஆராய்ந்து சென்றிருந்தனர்.
இதனையடுத்து, வந்த ஜனாதிபதியின் மகனும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ இப்பகுதிக்கு வந்து நிலத்தை தொழிற்சாலைக்கு வழங்குமாறு கேட்டிருந்தார்.
இதனையடுத்து, வந்த ஜனாதிபதியின் மகனும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ இப்பகுதிக்கு வந்து நிலத்தை தொழிற்சாலைக்கு வழங்குமாறு கேட்டிருந்தார்.
ஆனால் பொதுமக்கள் சாதகமான பதிலெதனையும் வழங்கியிருக்கவில்லை, இந்த நிலையில், கடந்தவாரம் அந்தப் பகுதிக்கு கனரக வாகனங்களுடன் வந்த அதிகாரிகள் சிலர் கொங்கிறீட் தளமிட்டு, எல்லைகளைப் போட்டுள்ளனர். ஆனால் அந்த நிலத்திற்கான உறுதிகளை வைத்துள்ள உடமையாளர்களிடம் எந்தவிதமான அனுமதியும் பெற்றிருக்கவில்லை.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இந்த விடயம் குறித்து, அரச அதிபருடன் தொடர்பு கொண்டு விடயத்தை தெரிவித்தபோது, சம்பவம் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாதெனவும் தன்மூலமாக அவ்வாறான அனுமதியெதுவும் வழங்கப்படவில்லை எனவும் மக்களுக்கு அவர் தெரிவித்திருக்கின்றார்.
ஆனால் தொழிற்சாலை அமைப்பு பணிகளில் ஈடுபட்டிருப்போர், அரச அதிபரினதும், பிரதேச செயலரினதும் அனுமதி பெற்றே பணிகளை மேற்கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். இந்த நிலையில் மக்கள் பெரிதும் குழப்பமடைந்துள்ளனர்.
ஏற்கனவே சுமார் 1500ஏக்கர் வரையான விவசாய நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மீளக்குடியமர்ந்துள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்கு நம்பியிருந்த வயல் நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தொழிற்சாலை அமைப்பு பணிகளில் கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியும் உள்ளடக்கப்படுகின்றது. அந்தப் பகுதியில் ஏற்கனவே சுமார் 400வரையான சிங்கள மக்கள் குடியேறியிருந்தனர்.
தற்போது அந்தப் பகுதி பிடிக்கப்படுகின்றபோது, அங்கிருந்த மக்கள் தற்போது தமிழ் மக்கள் வாழும் பகுதிக்குள் வந்து தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்களில் அத்துமீறி குடியேறி வருகின்றனர்.
இது குறித்துக் கேட்டால் உடனடியாக அவர்கள் சண்டையிடுவதாகவும், அரச அதிபரும், பிரதேச செயலருமே தமக்கு அந்த அனுமதியை தமக்கு தந்ததாகவும் கூறுகின்றனர்.
ஆனால் இதற்கும் தம்மால் அனுமதி வழங்கப்படவில்லை என அரச அதிபர் மறுத்துள்ளார். இந்த நிலையில் தமது இருப்பிடங்களை விட்டு விரைவில் வெளியேறும் நிலை ஏற்படலாம் என அச்சம் தெரிவித்துள்ள மக்கள், தமது பகுதியில் நடப்பவை அனைத்தும் அரசியல் விடயங்கள் என தெரிவித்தள்ளதுடன், தமிழ் அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.