.

Home » » ஜனாதிபதி சொல்வது பச்சைப் பொய்! வடக்கில் எட்டுப்பேருக்கு ஓர் இராணுவச் சிப்பாய்! இரா.சம்பந்தன்

ஜனாதிபதி சொல்வது பச்சைப் பொய்! வடக்கில் எட்டுப்பேருக்கு ஓர் இராணுவச் சிப்பாய்! இரா.சம்பந்தன்


வடக்கில் எட்டுப்பேருக்கு ஓர் இராணுவச் சிப்பாய் என்ற நிலைமைதான் உள்ளது. அதுதான் உண்மை. தெற்கில் இருப்பது போன்ற நிலைமை வடக்கு, கிழக்கில் இல்லை. ராஜபக்சாக்கள் ஒரு விடயத்தைச் சொல்லும்போது உண்மையைப் பேசுவதில்லை. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற அரசின் யுத்த வெற்றி விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருப்பது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:

வடக்கிலிருந்து இராணுவ முகாம்கள் முழுமையாக அகற்றப்படவேண்டுமென நாம் எப்போதுமே கோரவில்லை. அப்படியான எந்தக் கோரிக்கையையும் நாம் எந்தச் சந்தர்ப்பத்திலும் முன்வைத்ததில்லை. இராணுவத்தின் பிரசன்னம் அங்கு குறைக்கப்படவேண்டுமென்றே நாம் எப்போதும் வலியுறுத்தி வருகிறோம்.

அளவுக்கதிகமான இராணுவப் பிரசன்னம் மக்களின் அன்றாட வாழ்க்கையில் அசௌகரியத்தையும், அவமானத்தையும் கொடுக்கும் வகையில் இருக்கிறது. மக்களின் அன்றாட வாழ்க்கையின் சகல கருமங்களிலும் படையினரின் தலையீடு இருக்கிறது. மக்கள் செய்யக்கூடிய விவசாயம், கைத்தொழில், வியாபாரம் என்பவற்றைக்கூட இராணுவமே செய்யும் ஒரு நிலைமை வடக்கில் உள்ளது.

மக்களின் தனிப்பட்ட வைபவங்களில் எந்தவித அழைப்பும் இல்லாமல் படையினர் கலந்துகொள்கின்றனர். அங்கு சிவில் நிர்வாகம் தொடர்பான தீர்மானங்களை அரச அதிபரோ, பிரதேச செயலாளரோ எடுப்பதில்லை. மாறாக படையினர்தான் அங்கு சிவில் நிர்வாகத்தின் தீர்மானங்களை எடுக்கின்றனர்.

தெற்கில் இருப்பதுபோல் படை முகாம்கள் வடக்கில் செயற்படுவதில்லை. தெற்கில் கல்யாண வீடுகளுக்கும், கோவில் திருவிழாக்களுக்கும் படையினர் அழைப்பில்லாமல் செல்கின்றனரா என்று நான் கேட்க விரும்புகின்றேன். தெற்கில் சிவில் நிர்வாகத்தில் படையினரின் தலையீடு உள்ளதா என்பதை இவர்கள் முதலில் சொல்லட்டும்.

வடக்கில் ஒவ்வொரு 8 பேருக்கும் ஓர் இராணுவச் சிப்பாய் என்ற நிலைமை உள்ளது. வடக்கு, கிழக்கில் இருப்பதுபோலான நிலைமை தெற்கில் இல்லை. ராஜபக்சாக்கள் முதலில் யதார்த்தத்தை உணரவேண்டும். எதைச் சொன்னாலும் அவர்கள் உண்மையைப் பேசுவதில்லை. உண்மையை மழுப்பிப் பேசக்கூடாது. வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டுமென்பதுதான் எமது கோரிக்கை.

இவ்வாறு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்தார்.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved