.

Home » » மட்டக்களப்பில் முன்னாள் போராளிகளை புகைப்படம் எடுக்கும் படையினர்: அச்சத்தில் மக்கள்

மட்டக்களப்பில் முன்னாள் போராளிகளை புகைப்படம் எடுக்கும் படையினர்: அச்சத்தில் மக்கள்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசத்துக்குட்ட பகுதிகளில் உள்ள விடுதலைப்புலி உறுப்பினர்கள் தொடர்பான விபரங்களை படையினர் திரட்டிவருவதுடன், அவர்களை புகைப்படமும் எடுத்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை தொடக்கம் படையினர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாகரை, கதிரவெளி படை முகாமில் இருந்து படையினர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களின் வீடுகளுக்கு செல்லும் படையினர் அவர்களின் விபரங்கள் மற்றும் குடும்ப விபரங்கள், இயக்கத்தில் இருந்த காலப்பகுதி என்பனவற்றை பதிவுசெய்து செல்வதாக தெரிவித்தனர்.

அத்துடன் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களை புகைப்படமும் பிடித்துச் செல்வதாகவும் இதனால் அவர்கள் அச்சநிலையில் உள்ளதாகவும் அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இது தொடர்பில் படை உயரதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,

இது முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் மற்றும் புனர்வாழ்வு பெறாத உறுப்பினர்கள் பற்றிய தகவல்களை அறியவே பெறப்படுவதாகவும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியோர் தொடர்பில் எதுவித அச்சமும் கொள்ளத் தேவையில்லையெனவும் தெரிவித்தார்.

எனினும் குற்றச்செயல்கள் இடம்பெறாமல் தடுக்கும் நோக்கில் இதுவரையில் புனர்வாழ்வு பெறாதவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து இதுவரையில் புனர்வாழ்வளிக்கப்படாதோர் கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved