ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும் வரும் மாதங்களில் தென்அமெரிக்க நாடு ஒன்றுக்கான பயணத்தை மேற்கொள்ளலாம் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தப் பின்னணியிலேயே ஜெனிவாவில் உள்ள இலங்கை தூதுவர் தாமரா குணநாயகத்தை பிறேசிலுக்கான தூதுவராகப் பொறுப்பேற்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சர் கோரியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தென்அமெரிக்க நாடுகளில் விடுதலைப் புலிகளின் செல்வாக்கு அதிகரித்து வருவதாக தமக்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக தாமரா குணநாயகம் அண்மையில் எச்சரித்திருந்தார்.
இந்தநிலையில் தென்அமெரிக்க நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்த சிறிலங்கா அதிபரும், வெளிவிவகார அமைச்சரும் அங்கு செல்வதற்குத் திட்டமிட்டிருக்கலாம் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை, கியூபா தவிர்ந்த ஏனைய தென்அமெரிக்க நாடுகள் ஆதரித்திருந்தன.
ஏற்கனவே கியூபாவில் பணியாற்றியவர் என்பதாலும், ஸ்பானிய மொழித்தேர்ச்சி பெற்றவர் என்பதாலும் தாமராவை பிறேசிலுக்கான தூதுவராக நியமித்து, அவர் மூலம் தென்அமெரிக்க நாடுகளில் காலூன்ற முனையும் விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகளை ஒடுக்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.