இலங்கையில் இன்னுமொரு வேலுப்பிள்ளையின் மகன் தமிழர்களுக்காக போராட வருவதற்கிடையில், தமிழ்களுக்கான உரிமைகளை வழங்க ஜனாதிபதியும் அரசாங்கமும் முன் வரவேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு இராஜதுரை நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில், தந்தை செல்வாவின் 35வது நினைவு தின வைபவம் நேற்று மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது, அங்கு உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமிழ் தேசியத்திற்காக இரண்டு வேலுப்பிள்ளையின் மக்கள் போராட்டத்தை நடாத்தினர். தமிழர்களின் வரலாற்றில் 30 வருடங்கள் அகிம்சைப் போராட்டத்தை ஒரு வேலுப்பிள்ளையின் மகனான தந்தை செல்வாவும், மற்றய 30 வருட ஆயுதப் போராட்டத்தை மற்றுமொரு வேலுப்பிள்ளையின் மகனுமே நடாத்தினர்.
இந்நிலையில், இன்னுமொரு வேலுப்பிள்ளையின் மகன் வருவதற்கிடையில் அரசாங்கமும் ஜனாதிபதியும் தமிழ்களுக்கான அரசியல் தீர்வை வழங்கி உரிமைகளை கொடுத்து தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும்.
தந்தை செல்வா தமிழ் மக்களுக்காக வழங்கிய வீட்டை சிலர் மறைத்தார்கள் ஆனால் அந்த வீடுதான் தற்போது தமிழர்களுக்கு விமோசனத்தை ஏற்படுத்தி நிற்கின்றது.
இன்னும் அந்த வீட்டை வேலி போட்டு மறைப்பதற்கு சிலர் முயன்று வருகின்றனர். அதற்கு நாம் ஒரு போதும் விடமாட்டோம். தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும் தமிழ் மக்களின் தேசியத்திற்காகவும் அகிம்சை வழிப்போராட்டம் நடாத்திய தந்தை செல்வாவின் வழியில் நாம் இன்று பயணித்துக் கொண்டிருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா,
தந்தை செல்வா ஒரு தீர்க்க தரிசி இன்று நடப்பதை அன்றே சொல்லி வைத்தார். தமிழர்களின் பாரம்பரிய பிரதேசம் பறி போகப்போகிறது என்பதை உணர்ந்த தந்தை செல்வா அன்று அரசாங்கத்துடன் பேசினார். அதற்காக சாத்வீக ரீதியான போராட்டத்தை நடாத்தினர்.
இன்று தமிழ் மக்களின் 25000 ஏக்கர் காணிகள் வேலையில்லா ஊர்காவற்படை வீரர்களுக்கு அரசாங்கம் பயிர்ச்செய்கைக்காக வழங்கியுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட காணிகளை கிழக்கு மாகாண சபை பாதுகாப்பதற்காக அவர்களுக்கு வேலி போட்டு கொடுத்துள்ளது என்பதை நான் இங்கு வேதனையுடன் சுட்டிக்காட்டுகின்றேன்.
தமிழர்களுக்கு சொந்தமான காணியினை சிங்கள ஊர்காவற்படைக்கு வழங்கிய போது அதை கிழக்கு மாகாண சபை பாதுகாப்பதற்காக வேலி போட்டு போட்டு வழங்கியுள்ளதை நினைக்கும் போது வேதனையாக உள்ளது.
தமிழ் மக்களுக்காக செய்யப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களும் அமுல்படுத்தப்படாமல் கிடப்பிலேயே கிடந்து வந்துள்ளன. பண்டா செல்வா ஒப்பந்தம் நடைபெற்ற போது 200 பௌத்த பிக்குகள் அணி திரண்டு இந்த ஒப்பந்தத்தை கிழித்தெறிய வேண்டுமென பாதை யாத்திரை நடாத்தி அதை கிழித்தெறிய வைத்தார்கள்.
1965ம் ஆண்டு டட்லி ஒப்பந்தம் அதிலும் எதுவும் நடக்கவில்லை. 13வது சரத்தும் நிறைவேற்ற முடியாமல் போனது. முனசிங்க அறிக்கை அதுவும் நடக்கவில்லை. திஸ்ஸ விதாரணவின் சர்வ கட்சி மாநாடு அதுவும் கிடப்பில்தான் உள்ளது.
இவ்வாறு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தங்கள் எல்லாம் கிடப்பில்தான் உள்ளன. இன்று தெரிவுக்குழுவில் விமல் விரவன்ச மற்றம் ஹெல உருமய அங்கம் வகிப்பது தமிழ் மக்களுக்கு விமோசனத்தை தராது.
தெரிவுக்குழுவுக்கு நாம் செல்வதற்கு முன்னர் நாம் ஒப்பந்தமொன்றை செய்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன்,
அகிம்சை போராட்டம் ஆயுதப்பபோராட்டம் இவ்விரண்டையும் பிரித்துப்பாக்க தேவையில்லை. அன்று தந்தை செல்வாவின் வேண்டுகோளிலேயே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கினார்கள் அதன் மூலம் 36 இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும் ஒரு இயக்கம் மாத்திரம் களத்தில் நின்று முள்ளிவாய்க்கால் வரை போராடியது.
அதனால் தந்தை செல்வாவை நினைவு கூறும் அதே நேரம் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த அந்த இளைஞர்களையும் நாம் நினைவு கூர்ந்துகொள்ள வேண்டும். எனப்படும் அகிம்சைப் போராட்டம் எனப்படும் ஆயுதப்போராட்டம் நடைபெற்றுள்ள நிலையில், இன்று இராஜதந்திரப் போராட்டம் வெற்றியடைய வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.