.

Home » » யூரோ பிரச்னைக்கு தீர்வு காண போராடும் ஐரோப்பியத் தலைவர்கள்

யூரோ பிரச்னைக்கு தீர்வு காண போராடும் ஐரோப்பியத் தலைவர்கள்

யூரோ செலாவணியை நிலைப்படுத்தவும் சந்தையை அமைதிப்படுத்தவும் வழி கண்டறிய பிரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த கூட்டத்தில் யூரோ மண்டலத் தலைவர்கள் இன்னும் தடுமாறிக் கொண்டு தான் இருக்கின்றனர்.
புதன்கிழமை தான் கடைசிநாள் என்று அறிவித்த பிறகும் கூட 17 தலைவர்களாலும் ஒரு நல்ல முடிவுக்கு வர இயலவில்லை.
 கிரேக்க நாட்டின் கடனுக்கு விலக்கு அளிக்கவும் நலிந்துவரும் வங்கிகளை வலிமைப்படுத்தவும் ஐரோப்பாவில் பிணைய நிதியைத் திரட்டும் பெரும் முயற்சி குறித்து தலைவர்கள் இக்கூட்டத்தில் விவாதித்தனர். ஆனால் ஆறு மணி நேரத்துக்கு மேலாக விவாதம் நடந்த பிறகும் ஐரோப்பாவில் திவாலான வங்கிகளைப் பற்றிய பேச்சே தொடர்ந்தது.
மறு முதலீட்டுத் திட்டம் பிரிட்டன் வங்கிகளை உள்ளடக்கவில்லை. இத்திட்டத்திற்கு தேவைப்படும் நுறு பில்லியன் யூரோவை வங்கிகள் அடுத்த யூலை மாதத்திற்குள் தனியார் முதலீடு மூலமாகத் திரட்ட இயலவில்லை என்றால் தேசியக் கருவூலங்களில் இருந்துதான் பெறவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இத்தலைவர்கள் கூட்டத்தில் ஒன்றரை மணி நேரம் கலந்து கொண்ட பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் பின்னர் அவுஸ்திரேலியாவுக்குக் கிளம்பிவிட்டார். ‘சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது’ என்று நிரூபர்களிடம் தெரிவித்தார்.
கிரேக்கக் கடனை விலக்கிவிடவும் பிணைய நிதியை அதிகப்படுத்தவும் ஒப்பந்தங்கள் உருவானால் மட்டுமே இக்கூட்டம் எதிர்பார்த்த நன்மையைப் பெறமுடியும். பிறகும் கூட இந்தத் தொகையால் சந்தையைத் திருப்திப்படுத்த முடியாது.
ஜேர்மன் அதிபரும் பிரான்ஸ் அதிபரும் தலைவர்கள் கூட்டத்திலிருந்து பாதியிலேயே எழுந்து உலகவங்கிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கடன் தள்ளுபடி பற்றி பேசுவதற்குப் பக்கத்து அறைக்குச் சென்றனர்.
வங்கிப் பிரதிநிதிகள் 40 சதவீத தள்ளுபடிக்கு ஒத்துக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு மேல் வங்கிகளால் தள்ளுபடி செய்ய இயலாது என்று வங்கிப் பிரதிநிதிகள் தெரிவித்துவிட்டனர்.
ஆனால் இந்தத் தள்ளுபடியால் சந்தை நிலையைச் சரிக்கட்ட இயலாது. இதனால் கிரேக்கக் கடன் பிரச்னை ஒரு தொற்று நோய் போல யூரோ செலாவணி புழக்கத்தில் உள்ள ஐரோப்பாவின் பிற நாடுகளுக்கும் பரவக்கூடும். இப்போது முதலாவதாக இத்தாலி நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.
அடுத்ததாக நவம்பர் மாதம் 3,4 திகதிகளில் கேன்ஸில் நடக்கும் G20 கூட்டமே யூரோ மண்டலப் பிரச்சனைகளை தீர்க்கக் கடைசி நாளாகும் என்று தெரிவித்த அதிகாரிகள், அன்று இறுதித் தொகையை வரையறுக்க இயலாமற்போனாலும் பெரிய அளவிலான ஓர் ஒப்பந்தம், G20 உறுப்பினர்களைக் கொண்டு உருவாகும். அதன் பிறகு இந்த நிதிநெருக்கடிப் பிரச்னை நல்ல தீர்வை நோக்கி புதிய பாதையில் பயணிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved