துருக்கியில் கடந்த வாரம் 7.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் துருக்கியின் கிழக்குப்பகுதியில் கடும் சேதம் அடைந்தது.
வேன் நகரில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. இடிபாடுகளை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடக்கிறது.
ஆயிரக்கணக்கானோர் இதில் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுவரை 366 உடல்கள் மீட்கப்பட்டன. 1,301 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கி தவிக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடக்கிறது. துருக்கியின் எர்சிஸ் மாவட்டத்தில் பிறந்து 3 வாரமே ஆன பச்சிளங் குழந்தை நில நடுக்கம் ஏற்பட்ட 2 நாட்கள் கழித்து இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டது.
பெற்றோரை இழந்த அந்த குழந்தையை நிவாரண முகாமில் வைத்து டாக்டர்கள் கவனித்து வருகிறார்கள். ஈரான் எல்லையில் உள்ள 75 ஆயிரம் மக்கள் வசித்த நகரில் நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் தரைமட்டமானது. அடுக்குமாடி குடியிருப்புகளும் இடிந்தது.
இதில் பலர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் சாவு எண்ணிக்கை மேலும் உயரும். மீட்பு பணிக்கு வெளி நாடுகளின் உதவி தேவையில்லை என்று துருக்கி அரசு மறுத்துவிட்டது.
பாதிக்கப்பட்ட பகுதிக்கு நிவாரணப் பொருட்கள் சப்ளை செய்வதில் 26 விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான மீட்பு வாகனங்கள் எந்திரங்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் 3 ஆயிரம் வீரர்களும், 355 என்ஜினீயரிங் வாகனங்களும் ஈடுபட்டுள்ளன. 100 ஆம்புலன்சுகள் அவசர சிகிச்சை உதவிக்கு தயார் நிலையில் உள்ளது.