கரந்தெனிய பிரதேசத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கரந்தெனிய பிரதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்ற நிலை காரணமாக அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு அங்கு விசேட அதிரடிப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இந்தப் பிரதேசத்தில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் மறு அறிவித்தல் வரும் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் காலி, கரந்தெனிய பகுதியில் பிரபல வைத்தியர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களான வைத்தியர் மற்றும் இராணுவக் கப்டன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து இன்றைய தினம் குறித்த வைத்தியரின் வீடும், அவரது தனியார் வைத்தியசாலையும் பொதுமக்களால் தீ வைத்து கொழுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய அப்பிரதேசத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இந்த கொலைச் சம்பவத்துடனான சந்தேக நபர்கள் மீது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.