போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவின் நியமனம் தொடர்பாக ஐ.நா பொதுச்செயலரால் எதையும் செய்யவும் முடியாது, அவர் எதையும் செய்யவும் மாட்டார், அதுபற்றி ஏதும் கூறப்போவதும் இல்லை என்று ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெர்ஸ்க்கி தெரிவித்துள்ளார்.
நியுயோர்க்கில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அவரிடம் சவீந்திர சில்வாவின் நியமனத்தை நிறுத்த ஐ.நா பொதுச்செயலர் நடவடிக்கை எடுப்பாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த மார்ட்டின் நெர்ஸ்க்கி,“ஐ.நா பொதுச்சபை தான் இந்த சிறப்பு ஆலோசனைக் குழுவை அமைக்குமாறும் அதனை எவ்வாறு தெரிவு செய்வது என்றும் ஐ.நா பொதுச்செயலருக்கு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது.
அதன்படி 5 உறுப்பினர்கள் அமைதிப்படையில் பங்கேற்கும் நாடுகளின் சார்பிலும், 5 உறுப்பினர்கள் அமைதிப்படைக்கு நிதி வழங்கும் நாடுகள் சார்பிலும், தலா ஒவ்வொரு பிரதிநிதி பிராந்திய நாடுகளின் குழுக்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
ஐ.நா பொதுச்செயலருக்கு 5 சிறப்பு நிபுணர்களைத் தெரிவு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
அந்த ஐவரில் சவீந்திர சில்வா உள்ளடங்கவில்லை. அவரைத் தெரிவு செய்தது ஆசிய நாடுகளின் குழு தான்.
இவர் இந்தப் பதவிக்கு நிறுத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது ஐ.நா பொதுச்சபையின் தீர்மானத்துக்கு ஏற்புடையது.
இந்த விடயத்தில் ஐ.நா பொதுச்செயலர் எந்தவகையிலும் தலையிட முடியாது. தலையிடப் போவதும் இல்லை.“ என்று குறிப்பிட்டுள்ளார்.