நடிகையின் கணவரை பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் தாக்கிய சம்பவம் பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட்டில் கிருத்திக் ரோஷன், சஞ்சய் தத் நடித்த அக்னிபாத் திரைப்படத்திற்காக மும்பை புறநகரில் உள்ள நட்சத்திர விடுதியில் படத்தின் வெற்றியை கொண்டாட நடிகர் சஞ்சய் தத் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு விருந்து கொடுத்தார்.
அதில் நடிகை பாரா கானின் கணவர் ஷிரிஷ் குந்தர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். நேற்று அதிகாலை வரை நீடித்த விருந்தில் அதிகாலை(இந்திய நேரம்) 4.30 மணி அளவில் ஷாருக்கான் தனது 3 பாதுகாவலர்களுடன் ஷிரிஷ் குந்தர் இருந்த இடத்துக்கு சென்றார்.
யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் குந்தரின் சட்டையை பிடித்து கீழே தள்ளினார். பின்னர் குந்தர் முகத்தில் ஒரு குத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
ஷாரூக்கானின் இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராத ஷிரிஷ் குந்தர் நிலைகுலைந்து விழுந்தார். இதைக் கண்ட சஞ்சய்தத் விரைந்து சென்று, ஷாரூக் கானை பிடித்து சண்டையை விலக்கினார்.
அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி காரில் ஏற்றி அனுப்பி வைத்தார். சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், என்ன நடக்கிறது என்று யூகிப்பதற்குள் குந்தரின் தலைமுடியை பிடித்து இழுத்து ஷாரூக்கான் தாக்கினார்.
அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தோம். தடுக்க வந்த பாபா தீவானை எச்சரித்து விரட்டினார் ஷாரூக். அப்போது சஞ்சய்தத் வந்து தடுக்கா விட்டால் விளைவு மோசமாகி இருக்கும் என்றார்.
இதுபற்றி ஷிரிஷ் குந்தரின் நண்பர் கூறுகையில், ஷாரூக்கானின் ரா 1 படத்தை ஷிரிஷ் விமர்சித்தார். அப்போதே அவர் மீது ஷாரூக் கோபமடைந்தார்.
ஆனால் சமீபத்தில் ஷாரூக், பிரியங்கா சோப்ராவை இணைத்து ஷிரிஷ் கமென்ட் அடித்ததால் ஷாரூக் ஆத்திரம் அடைந்ததாக தெரிகிறது என்றார்.
சம்பவம் பற்றி நடிகை பாரா கான் கூறுகையில், பிரச்சினையை தீர்க்க அடிதடியை கையாள்வது மிக மோசமான பழக்கம் என்று அடிக்கடி என்னிடம் ஷாரூக் கூறுவார். அவரே இப்படி செய்தது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று தெரிவித்துள்ளார்.