சிட்னி: ""முத்தரப்பு தொடரில் சாதிக்க, இளம் இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு படை எடுத்துள்ளனர். இவர்கள் நல்ல "பார்மில்' இருப்பதால், இம்முறை முற்றிலும் மாறுபட்ட ஆட்டத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்,''என, சுரேஷ் ரெய்னா நம்பிக்கை தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரை படுமோசமாக இழந்தது. இத்தொடரில் சச்சின், டிராவிட், லட்சுமண் உள்ளிட்ட "சீனியர்' வீரர்கள் ஏமாற்றினர். அடுத்து இந்தியா, ஆஸ்திரேலியா இடையே இரண்டு "டுவென்டி-20' போட்டிகள்(பிப்., 1, 3) மற்றும் மூன்றாவது அணியாக இலங்கை பங்கேற்க முத்தரப்பு ஒருநாள் தொடர்(பி.,5-மார்ச் 8) நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணியில் ரெய்னா, ரோகித் சர்மா, ரவிந்திர ஜடேஜா உள்ளிட்ட இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களது வரவால், மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து ரெய்னா அளித்த பேட்டி:
டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் நான் இடம் பெறவில்லை. ஆனாலும், போட்டிகளை "டிவி'யில் பார்த்தேன். ஆஸ்திரேலிய வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடினர். தாங்கள் வகுத்த திட்டங்களை நன்கு நிறைவேற்றிக் காட்டினர். இந்திய அணி பேட்டிங்கில் கோட்டை விட்டது. "பார்ட்னர்ஷிப்' அமைத்து விளையாட தவறியது.
முத்தரப்பு தொடரில், நிலைமை கண்டிப்பாக மாறும். ஏனென்றால், இத்தொடருக்காக இளம் வீரர்கள் சிறப்பான முறையில் தயாராகி உள்ளனர். இவர்கள், உள்ளூரில் நடந்த முதல் தர போட்டிகளில் அசத்தலாக ஆடினர். மூன்று அல்லது நான்கு உள்ளூர் போட்டிகளில் விளையாடிய நான், ஒரு இரட்டை சதம் அடித்தேன்.
டெஸ்ட் போட்டிகளில் இருந்து "டுவென்டி-20', ஒரு நாள் போட்டி மாறுபட்டது. உலக கோப்பை காலிறுதியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. கடந்த முறை ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் தொடரை வென்றோம். தொடர்ந்து உலக கோப்பையை கைப்பற்றினோம். இந்த அணியில் இடம் பெற்ற வீரர்களில் பெரும்பாலானோர் தற்போது ஆஸ்திரேலியா வந்துள்ளோம். இம்முறை இந்திய அணியிடம் இருந்து முற்றிலும் மாறுபட்ட, மிகவும் தரமான கிரிக்கெட்டை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். அடுத்த உலக கோப்பை தொடர் (2015)ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் தான் நடக்க உள்ளது. இதில் சாதிப்பதற்கு, முத்தரப்பு தொடர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பந்துகள் எகிறும். இங்கு எப்படி விளையாட வேண்டும் என்பதற்காக, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்றேன். தவிர சச்சினும் இருப்பதால், அவரது ஆலோசனைகள் பயன் தரும். பீல்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கடைசி பந்து வரை பேட் செய்ய வேண்டும். அணியில் சிறந்த ஆல்-ரவுண்டர்கள் உள்ளனர். பிரவீண் குமார், இர்பான் பதான், வினய் குமார் ஆகிய "வேகங்கள்' பல்வேறு வகையில் பந்துவீசுவதில் வல்லவர்கள். ஒட்டுமொத்தமாக இந்திய அணியின் ஆட்டத்தில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.
இவ்வாறு ரெய்னா கூறினார்.
பயிற்சி பாதிப்பு
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதலாவது "டுவென்டி-20' போட்டி நாளை சிட்னியில் உள்ள ஏ.என்.இசட் மைதானத்தில் நடக்க உள்ளது. இது, 2000ல் நடந்த ஒலிம்பிக் போட்டிக்காக கட்டப்பட்டது. சுமார் 1 லட்சம் பேர் வரை அமர்ந்து போட்டியை ரசிக்க முடியும். இங்கு கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்தது. ஆடுகளம் ஈரமாக உள்ளதால், இந்திய வீரர்கள் நேற்று முழுமையாக வலை பயிற்சியில் ஈடுபட முடியவில்லை. "பீல்டிங்' பயிற்சி மட்டும் மேற்கொண்டனர்.
இது குறித்து ரெய்னா கூறுகையில்,""முத்தரப்பு தொடரில் பங்கேற்கும் இளம் வீரர்கள் முன்னதாகவே ஆஸ்திரேலியா வந்துவிட்டனர். அடிலெய்டு டெஸ்ட் போட்டி நடந்த போது, நன்கு பயிற்சி மேற்கொண்டாம். இன்று, அருகில் உள்ள எஸ்.சி.ஜி., மைதானத்துக்கு சென்று பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்,''என்றார்.