முள்ளிவாய்க்காலின் பின்னரான இலங்கைத்தீவின் இனநெருக்கடி விவகாரத்தில், ஐ.நா மனித உரிமைச் சபையின் 19வது இம்முறைக் கூட்டத் தொடர் முக்கிய விடயமாகவிட்டது.
இலங்கை அரசு மீதான சர்வதேசத்தினது அழுத்தங்கள், ஐ.நா மனித உரிமைச் சபையில் தீர்மானமாக வடிவம்பெறவுள்ள நிலை, சிங்கள தேசத்தை அச்சங்கொள்ள வைத்திருக்கும் சமவேளை, சர்வதேசத்திடம் நீதிகேட்டு நிற்கும் தமிழர்களுக்கு, தங்களின் நியாயப்பாட்டை நிலைநிறுவதற்கான ஒரு வாய்ப்பை இது ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இலங்கை தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையை, சர்வதேசத்திடம் வலியுறுத்தும் வகையில், ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடர் தொடங்குகின்ற நாளில், நீதிக்காய் ஒன்றுபடுவோம் எனும் மாபெரும் மக்கள் போராட்டத்துக்கு, புலம்பெயர் தமிழர்கள் ஜெனீவாவில் ஒன்றுகூட தயாராகி வருகின்றனர்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இந்தப் மக்கள் போராட்டத்துக்கு, புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள், ஊடகங்கள் மற்றும் தமிழகத்தில் இருந்தும் தமிழ் உணர்வாளர்கள் மக்களை அணிதிரள அழைப்பு விடுத்துள்ளனர்.
சுவிசின் பல பாகங்களிலும் இருந்து பேருந்துகள் மற்றும் ஐரோப்பாவின் பல நாடுகளிலும் இருந்தும,; பெருமளவிலான மக்கள் பங்கெடுக்கும் பங்கெடுக்கும் மாபெரும் மக்கள் எழுச்சி நிகழ்வாக இது அமையவுள்ளது.
ஐ.நா கூட்டத் தொடர் ஆரம்பிக்கின்ற நாளிலேயே, ஜெனீவாவில் புலம் பெயர் தமிழர்கள் ஒன்றுகூடுகின்றார்கள் என்ற விடயம், இலங்கைக்கு எரிச்சல் கொள்ள வைத்துள்ள நிலையில், தலைநகர் கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும், இதேநாளில் சர்வதேசத்துக்கு எதிராக மக்களை அணிதிரளுமாறு, இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இத்தகைய சூழலில், வரிந்து கட்டிநிற்கும் சிங்கள தேசத்தை, சர்வதேச நீதியின் முன்நிறுத்த, புலம்பெயர் தமிழர்களின் நீதிக்கான குரல், ஐ.நா மனித உரிமைச் சபையின் காதுகளில் ஒலிக்க வேண்டும் என்பதே சுதந்திர தமிழீழத்தை வேண்டி நிற்கும் உலகத் தமிழர்களது எதிர்பார்ப்பாகவுள்ளது.