கோவை: தமிழகம் முழுவதும் தொடர்ந்து மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவையில் மட்டும் சில நாட்களாக 8 மணி நேரத்துக்கு மேல் மின்வெட்டு இருக்கிறது. இதனால் சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் ஸ்தம்பித்துள்ளன. நேற்று மட்டும் 13 மணி நேரம் மின்தடை செய்யப்பட்டது. இதை கண்டித்து கோவையில் தொழில்துறையினர், பொதுமக்கள் பல்வேறு இடங்களில் சாலை மறியல், மின்அலுவலகங்கள் முற்றுகை என போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கோவையை சேர்ந்த 36 தொழில் அமைப்புகள் இணைந்து இன்று கதவடைப்பு மற்றும் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
கோவை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்ஜினியரிங் தொழிற்சாலைகள், வார்ப்பட தொழிற்சாலைகள் இன்று காலை முதல் மூடப்பட்டன. நாளை காலை 6 மணி வரை தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கும். இதனால் நகரமே வெறிச்சோடி காணப்பட்டது. மின்மோட்டார், பம்ப் செட் தயாரிப்பு நிறுவனங்கள், குறுந்தொழிற்சாலைகள், 450க்கும் அதிகமான வார்ப்பட தொழிற்சாலைகள், அரசூர் வார்ப்பட தொழிற்பேட்டை, சிறு ஸ்பின்னிங் மில்கள், சிட்கோ தொழிற்பேட்டையில் 300க்கும் அதிகமான தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இன்று காலை காந்திபுரத்தில் தொழில் அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
போராட்ட குழுவை சேர்ந்த கந்தசாமி (கொடிசியா), ஜேம்ஸ் (டாக்ட்), கல்யாணசுந்தரம் (டாப்மா) ஆகியோர் கூறியதாவது: போட்டி அதிகரித்துள்ள சூழலில் தொடர் மின்வெட்டு தொழில் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும். தொழிலாளர்களுக்கும் முழுமையாக வேலை கொடுக்க இயலாத நிலை. மின்வெட்டை சமாளிக்க முந்தைய ஆட்சியில் அமல்படுத்தியதை போல் மின் விடுமுறை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதை செயல்படுத்தினாலே தொழில் துறையினரின் பொருளாதார இழப்பை சரிகட்ட முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.