.

Home » » யாழ்.வலிகாமம் கரையோரப் பகுதியிலுள்ள மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் கடற்படையினர்!

யாழ்.வலிகாமம் கரையோரப் பகுதியிலுள்ள மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் கடற்படையினர்!


யாழ்.வலிகாமம் வடக்கில், கரையோரப் பகுதிகளில் குடியிருக்கும் மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றுவதற்கான கடற்படையினரால் உச்சக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதி மக்கள் தமது காணிகளில் உள்ள பற்றைகளை வெட்டியகற்ற முடியாதளவிற்கு கடற்படையினர் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 30வருடங்கள் உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வைக்குள் வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்தாண்டின் நடுப்பகுதியில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில் சுமார் 97குடும்பங்களைச் சேர்ந்த மக்கள், பொன்னாலை-கீரிமலை வீதியின் இருபுறமும் கரையோரத்தை அண்டியும், அப்பாலும் வாழ்ந்து வருகின்றனர்.
இதற்கிடையில் இப்பகுதியில் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத் தொழில் கடற்றொழில்.
எனினும், மீள்குடியேற்றத்தின் ஆரம்பத்தில் இப்பகுதி மக்கள் சுதந்திரமாக கடலில் இறங்கி தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தியதன் விளைவாக, மீன்பிடியிலிருந்த கெடுபிடிகள் மெல்ல மெல்ல தகர்க்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து, இந்தப் பகுதியில் மலசலகூடங்களை அமைப்பதற்கான அனுமதிகளை வழங்க முடியாது என கடற்படையினர் மறுப்புத் தெரிவித்து வந்தனர். அதுவும் பின்னர் வலிவடக்கு பிரதேச சபையின் முயற்சியினால் 44 குடும்பங்களுக்கு மலசல கூடங்களை அமைக்க கடற்படையினர் அனுமதித்தனர்.
இதேபோல் மக்கள் குடிமனைப் பகுதிக்குள் மலக்கழிவுகளை கொண்டு வந்து கொட்டுதல் போன்ற சம்பங்களும் இடம்பெறுகின்றனர். அண்மையில் பற்றைகளை வெட்டியதற்காகவும் அவற்றை தீயிட்டதற்காகவும் பிரதேச சபை தலைவர் உட்பட உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் மீது கடற்படையினர் தாக்குதல் நடத்திருந்தனர். இதேபோல் தொடர்ந்தும் இந்தப் பகுதி மக்கள் தமது வளவுகளிலுள்ள பற்றைகளை வெட்டுவதற்கும் அவற்றை தீயிடுவதற்கும் கடற்படையினர் மறுப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இதனை மீறி தீயிட்டால் உடனடியாக அங்கு வரும் கடற்படையினர் கண்மூடித்தனமாக பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டுச் செல்கின்றனர். அதற்கும் மேல் கிராமத்திலுள்ள ஆண்களை விசாரணைக்கென கொண்டு செல்லுதல் போன்ற சம்பங்களும் இடம்பெறும் இதனால் மக்கள் யாரும் தமது வளவுகளிலுள்ள பற்றைகளை வெட்டமுடியாத நிலையில் அடர்ந்து வளர்ந்த பற்றைகளிற்குள் விஷ ஜந்துக்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
எனவே இப்பகுதி மக்கள் மீள்குடியேற்றத்தின் பின்னரும் மிகக்கூடியளவு நெருக்கடிகளுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த நடவடிக்கைகள் அனைத்துமே கரையோரப் பகுதிகளிலிருந்து மக்களை அகற்றுவதற்காகவே மேற்கொள்ளப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்து.
இதுவும் கரையோரங்களை ஆக்கிரமித்து சீன அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின்சார உற்பத்திக்கு இடம் ஒதுக்கவே எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேபோல் கடற்படையினரால் கீரிமலை மயானமும் ஆக்கிரமிக்கப்பட்டு பயன்படுத்தப்படாத நிலையில் கம்பிவேலிகள் போடப்பட்டு வெறுமனே விடப்பட்டுள்ளது.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved