தமிழ்நாட்டில் உள்ள விடுதி ஒன்றில் மதுபோதையில் குழப்பம் விளைவித்த சிறிலங்கா அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை காவல்துறையினர் தூக்கிச்சென்று அவரது அறைக்குள் தள்ளிப் பூட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சிறிலங்காவின் கிராமிய தொழில்துறை அமைச்சர் ஆறுமுக தொண்டமானின் நண்பர் இல்லத் திருமணம் நேற்று திருச்சியில் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற ஆறுமுகன் தொண்டமான், மற்றொரு நண்பரை சந்திக்க கோவைக்குச் சென்றிருந்தார்.
கோவை பந்தயத்திடலில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் உதவியாளர்கள் ரோகன் டென்னிஸ், ராஜா மணிகண்டன் ஆகியோருடன் தங்கியிருந்தார்.
நள்ளிரவு மதுபோதையில் விடுதி வரவேற்பாளர் பகுதிக்கு சென்ற ஆறுமுகன் தொண்டமான், அங்கிருந்த பெண் பணியாளர்களிடம் தரக்குறைவாகப் பேசியதாக கூறப்படுகிறது.
விடுதிப் பணியாளர்கள் அவரை சமாதானப்படுத்தி அறைக்கு அனுப்ப முயன்றனர்.
அதற்கு அவர், ‘என்னை ஒன்றும் செய்ய முடியாது, நான் இந்திய அரசின் விருந்தினர்’ என்று கூறி அறைக்குத் திரும்ப மறுத்துள்ளார்.
ஆறுமுகன் தொண்டமானின் குழப்பம் நீடிக்கவே, அதுபற்றி காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் சுந்தரமூர்த்தி உத்தரவின்பேரில், உதவி ஆணையாளர் அப்பாதுரை, பந்தயத்திடல் ஆய்வாளர் கணேசன் ஆகியோர் அங்கு சென்று ஆறுமுகன் தொண்டமானைச் சமாதானப்படுத்தினர்.
அவர், தொடர்ந்து வாக்குவாதம் செய்யவே, காவல்துறையினர் தூக்கிச் சென்று அவரது அறையில் தள்ளி பூட்டினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு எதிராக ஆர்ப்பாட்டம். 12 பேர் கைது
தமிழகம் கோயம்புத்தூரில் இலங்கையின் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று நடத்தப்பட்டுள்ளது.
விடுதி ஒன்றில் தங்கியிருந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், மதுபோதையில் அங்குள்ளவர்களுடன் பிரச்சினைப்பட்டதாக தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும் அமைச்சர் விடுதியில் வன்முறைகளில் ஈடுபடவில்லை என்று அமைச்சரின் ஊடகப்பிரிவு இலங்கையில் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அரசியல் பின்னணியாக இருக்கலாம் என்று இலங்கையின் பிரதி அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டம் தொடர்பில் 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே கடந்த மாதத்திலும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் வெளிநாடு ஒன்றில் குடிபோதையில் விடுதி ஒன்றில் உள்ளவர்களுடன் மோதலில் ஈடுபட்டு காயமடைந்தார்.
இதன்போது அவரின் கையில் முறிவும் ஏற்பட்டு சிசிச்சை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பில் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் ஆறுமுகன் தொண்டமானை எச்சரித்தார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.