அநீதி இழைக்கப்பட்ட தமிழினத்திற்கு நீதி வேண்டும், அதனை ஐநா பெற்றுத்தரவேண்டும் என்ற தாயக நேசத்துடன் பெல்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம் இன்று 21வது நாளாகவும் தளராத வேகத்துடன் தொடர்கின்றது.
நேற்று பாசல் பாராளுமன்றத்திற்கு முன்பாக நிறைவடைந்த நீதிக்கான நடைப்பயணம், இன்று அதே இடத்தில் ஆரம்பித்து 28 கிலோமீற்றர்கள் கடந்து Holstein எனும் இடத்தில் நிறைவடைந்தது.
இவர்களது நடை போராட்டத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில், சுவிஸ் மற்றும் பிரான்ஸ் நாட்டு தாயக உணர்வாளர்கள் இணைந்து நீதிக்கான நடை பயணத்தினை மேற்கொண்டுள்ளனர்.
தமிழினப் படுகொலை தமிழீழத்தில் உச்சத்தை எட்டிய காலகட்டமான 2009 மே காலப்பகுதியில் உலகத்தமிழினம் பாரிய அளவிலான வெகுசனப் போராட்டங்களை மேற்கொண்டது.
அப்போராட்டத்தை பிரித்தானிய மண்ணில் செறிவூட்டி தாயக மக்களின் அவலத்தை பிரித்தானியாவிற்கும் மற்றும் உலகிற்கும் உணர்த்த வேண்டும் என்பதற்காக அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தைச் செய்த பரமேஸ்வரனும் இவர்களுடன் இணைந்து நீதிக்கான பயணத்தை இன்று ஆரம்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்று பிரித்தானிய தமிழ் மக்களின் மாபெரும் பேரெழுச்சிக்கு பரமேஸ்வரனும் அவருடன் இணைந்து போராட்டத்தை மேற்கொண்ட இளையோர்களும் காரணமாவர்.
இன்றைய காலத்தின் தேவைகருதி உலகம் எமது பக்கம் மெல்ல மெல்ல செவிசாய்க்கும் தருணத்தில் உலகை எமது பக்கம் உள்ள நிலைப்பாட்டை எடுத்துக் கூற தற்போதைய காலம் சாலச்சிறநத்து.
இளைய சமுதாயமே உங்களால் தான் எமது தாயகத்தில் மக்களின் நிலையை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக்கூற முடியும். எனவே இளையோரே தயவு செய்து எங்களோடு இணைந்து வாருங்கள் மீண்டும் உலகிற்கு உணர்த்துவோம் என்று நீதிக்கான பயணத்தினை மேற்கொள்ளும் உணர்வாளர்கள் அறைகூவல் விடுக்கின்றனர்.
மார்ச் 5ம் திகதி ஒன்றுபட்ட இனமாய் அணிதிரள்வோம் ஐ.நா முன்றலில் வாருங்கள்.
