முல்லைத்தீவு - கொக்கிளாய், முகத்துவாரம் பகுதியில் ஆக்கிரமித்திருந்த 28 சிங்கள மீனவக் குடும்பங்கள் முறைப்படி அப்பகுதிக்குச் சொந்தக்காரர் என்ற தொனியில், ஆவணங்கள் எதனையும் பரிசீலிக்கப்படாமல் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தினால் மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
இந்த விடயம் குறித்து பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவிக்கையில்,
கொக்கிளாய், கருணாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் அகிய பகுதிகளைச் சேர்ந்த மீள்குடியேற்றப்படாத பகுதி மக்களுக்கான மீள்குடியேற்றப் பதிவுகள் நேற்று முன்தினம் செம்மலை மகாவித்தியாலத்தில் நடைபெற்றிருந்தது.
இதன்போது ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு, பவுகள் மேற்கொள்ளப்பட்டடு அதனடிப்படையில் மீள்குடியேற்றத்திற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தம்மையும் மீள்குடியேற்ற வேண்டும் என முகத்துவாரம் பகுதியில் அத்துமீறி குடியேறியிருந்த தென்னிலங்கை சிங்கள மீனவர்கள் கோரியிருந்தனர்.
இதனையடுத்து, அந்த மக்களையும் பதிவு செய்து அவர்கள் விரும்பும் இடத்தில் மீள்குடியேற்றுமாறு பிரதேச செயலர் கிராமசேவகர்களைக் கேட்டுள்ளார். எனினும், இதற்கு கிராமசேவகர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து விசேடமாக பதிவு செய்வதற்கான அலுவலர்களை பிரதேச செயலர் நியமித்துள்ளார்.
அவர்கள் மூலம் சிங்கள மக்கள் உள்ள இடங்களுக்கே சென்று ஆவணங்கள் எவையும் பரிசீலிக்கப்படாமல், மீள்குடியேற்றப் பதிவுகள் செய்யப்பட்டிருக்கின்றது. இதேபோன்றே முன்னரும் பிரதேச செயலகம் நடந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் சொந்த மண்ணில் சென்று குடியேறுவதற்கு தமிழ் மக்கள் நீண்டவரிசைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு, ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு, அதன் பின்னரே மீள்குடியேற்றத்திற்கான பதிவுகள் செய்யப்பட்டிருந்தன. இதேபோன்று மீள்குடியேறியுள்ள மக்களுக்கு வழங்கப்படும் உதவித்திட்டங்கள் எதிர்வரும் காலத்தில் சிங்கள மக்களுக்கும் வழங்கப்படவுள்ளது. எனவே இவ்வாறான நடவடிக்கை தொடர்ந்தும் நடைபெறும்.
இதேபோன்று, முகத்துவாரம் பகுதியில் ஆக்கிரமித்துள்ள சுமார் 300ற்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்களில் பதிவுகள் இல்லாத ஏனைய குடும்பங்களுக்கும் எதிர்காலத்தில் பதிவுகள் வழங்கப்பட்டு, அவர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக காட்டப்படப்போகிறார்கள் எனவும் பிரதேச செயலக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.