தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை கேட்பதனுடாக மீண்டும் பிரிவினை வாதத்தைத் தூண்டுவதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மீள்குடியேற்ற அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மாகாணங்களுக்கு காணி அதிகாரத்தை வழங்குவது ஓரளவிற்கு சாத்தியமாகும் விடயம் என்றாலும், பொலிஸ் அதிகாரத்தைப் பெற்றுக்கொடுப்பதன் ஊடாக கூட்டமைப்பினர் எவ்விதமான நன்மையை தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப் போகின்றனர் என்ற கேள்வியைக் கேட்டதுடன் , 75 சதவீதமான சிங்கள மக்களின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டு தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை பெறுவது சாத்தியமற்ற விடயம் எனவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த முரளிதரன், 'திருத்தச் சட்டத்தில் எதை நீக்குவது எதை உள்ளடக்குவது என்பது தொடர்பில் தீர்மானிக்கவே பாராளுமன்றத் தெரிவுக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்து செயற்பட்டால் பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்கலாம். மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை கோருவது அவசியமற்ற விடயம். பொலிஸ் அதிகாரத்தை பெற்று வீண் சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடாது" என தெரிவித்தார்.
இதேவேளை, புலம் பெயர்ந்து இந்திய முகாம்களில் தங்கியுள்ள அகதிகளின் நிலைமை தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், "உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியமர்த்தும் பணிகள் விரைவில் நிறைவடையவுள்ளன. அதேபோன்று இந்தியாவிலிருந்து வருபவர்களையும் மீள் குடியமர்த்தவுள்ளளோம். ஆயிரம் பேர் இதுவரை நாடு திரும்பியுள்ளனர்" எனக் குறிப்பிட்டார்.