.

Home » » மட்டு. விகாரை உண்ணாவிரதம் இன மற்றும் மத வாதத்தை தூண்டும் நடவடிக்கையே!- யோகேஸ்வரன் பா.உ.

மட்டு. விகாரை உண்ணாவிரதம் இன மற்றும் மத வாதத்தை தூண்டும் நடவடிக்கையே!- யோகேஸ்வரன் பா.உ.


மட்டக்களப்பு மாவட்ட மங்களராம விகாரையின் உண்ணாவிரதம் உட்பட்ட சில செயற்பாடுகள் யுத்தத்தின் பின் தமிழ் சிங்கள மக்களிடையே மீண்டும் இன வாதத்தையும், மத வாதத்தையும், ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கையாகும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவித்தார்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டம் பெரும்பான்மையாக தமிழ் மக்களையும், அதற்கு அடுத்தபடியாக முஸ்லிம் மக்களையும் கொண்டுள்ளதுடன் மிகச் சிறிதளவாக சிங்கள மக்கள் வசித்துள்ளனர்.
மட்டக்களப்பு புதூர் இந்து இளைஞர் மன்றமும், அறநெறி பாடசாலையும் நடாத்திய பரிசளிப்பு விழா, 24வது ஆண்டு நிறைவு விழா, கௌரவிப்பு விழா ஆகிய முப்பெரும் விழாவு அறநெறிப் பாடசாலை அதிபர் சி.மில்டன் தலைமையில் புதூர் விக்னேஸ்வரா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை வழங்கும் போது யோகேஸ்வரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், மட்டக்களப்பு மாவட்ட இந்து மத குருமார் பீட உபதலைவர் சிவஸ்ரீ. சா.ராமதாஸ் குருக்கள், செயலாளர் சிவஸ்ரீ. எஸ். விக்கினேஸ்வரக் குருக்கள், புதூர் நூலகர் எஸ்.சிறிஸ்கந்தராஜா, புதூர் விக்னேஸ்வரா வித்தியாலய அதிபர், மெதடிஸ்த மிஸன் பாடசாலை அதிபர், திமிலைத்தீவு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் மற்றும் ஊர்ப் பிரமுகர்கள், ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
இன்று ஒரு சிங்கள அரசியல் வாதி வேண்டும். பல பிக்குகள் வேணும், சிங்கள மக்கள் குடியேற்றப்பட வேண்டும் என பல கோரிக்கையுடன் உண்ணாவிரதம் உட்பட்ட செயற்பாடுகளை மேற்கொள்கின்றார். இவருக்கு சில தமிழ் அரச அதிகாரிகள் துணைபோவது கண்டு வேதனை அடைகின்றேன்.
சிங்கள மக்கள் யுத்தத்தின் பின் எங்கு எந்த அளவு வாழ்ந்தார்களோ அவ்வளவே குடியேற்ற முடியும். அதற்கு மேலாக குடியேற்ற முடியாது ஆனால் திட்டமிட்ட குடியேற்ற நிகழ்வுக்கு நாங்கள் இடமளிக்க முடியாது.
உண்மையிலே அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் ஆன்மீகக் கல்வியை சேவை அடிப்படையில் எதுவித வேதனமும் இன்றியே செயற்படுத்தி வருகின்றனர். இவர்களது ஆசிரியர் நியமனம் சார்பாக நடவடிக்கை எடுத்து வருகின்றேன். அதுமட்டுமின்றி அறநெறிப் பாடசாலைகளுக்கு சில உதவிகளை பெற்றுக் கொடுப்பது சார்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 200 வரையான அறநெறிப் பாடசாலைகள் பதியப்பட்ட போதும் சில பாடசாலைகள் இயங்குவதில்லை. பல சிறப்பாக இயங்குகின்றது. இந்த வகையில் புதூர் இந்து இளைஞர் மன்ற அறநெறிப் பாடசாலையும் சிறப்பாக செயற்பட்டு வருகின்றது.
இன்று அறநெறிப் பாடசாலைகள் எதிர்நோக்கும் சவால் அறநெறிப் பாடசாலை நடாத்தும் ஞாயிற்றுக்கிழமை காலை வேளை பிரத்தியேக கல்வி நிலையங்கள் இயங்குவதாகும். இதனை தடுக்கும் முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்டும் இது பூரணமாக வெற்றியளிக்கவில்லை.
உண்மையிலே பிரதேச சபைகள் மாநகர சபை என்பன இதற்கு சட்டம் இயற்றி செயற்பட முடியும் அதில் அவர்கள் அக்கறை காட்ட தவறியுள்ளனர். ஏனெனில் பிரத்தியேக கல்வி நிறுவனங்களை பதிவு செய்யவும் ஞாயிற்றுக்கிழமை காலை வேளை பிரத்தியேக கல்வி நிலையங்கள் இயங்குவதை தடுக்கவும் அதிகாரம் இவர்களுக்கு உண்டு.
ஆனால் இன்று நடைபெறும் இந்து சமய மாபெரும் விழாவுக்கு தலைமை தாங்கி செயற்படுத்தும் இதன் தலைவர் இந்நிகழ்வுக்கு மாற்று மத மாநகர சபை உறுப்பினர்களை அழைக்க வில்லை என்ற காரணத்தினால் இவரது தந்தையார் திட்டமிட்ட வகையில் இடமாற்றப்பட்ட நடவடிக்கையை கேள்வியுற்று நான் வன்மையாக கண்டிப்பதுடன் இவ்விடயமாக உள்ளுராட்சி ஆணையாளர் கவனத்துக்கும் உயர் அதிகாரிகள் கவனத்துக்குமட் கொண்டுவரவுள்ளேன்.
ஆனால் இவ்வருடம் பங்குனி மாதத்துடன் கலைய வேண்டிய மாநகர சபையை அரசாங்கத்தின் காலில் வீழ்ந்து மாநகர சபையினர் ஒருவருடம் நீடித்துள்ளனர். காரணம் இனி இவர்களுக்கு மாநகர சபை கதிரை கிடைக்காது என்ற பயமாகும்.
ஏனெனில் தேர்தல் நடைபெற்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பே மாநகர சபையை கைப்பற்றும் என்பது அசைக்க முடியாத உண்மையாகும்.
ஆனாலும் இவ்விடயமாக நாங்கள் மக்களின் ஜனநாய உரிமை மீறப்படுவதை சுட்டிக்காட்டி வழங்குத் தாக்கல் செய்யவுள்ளோம். தேர்தல் நடைபெற்றால் நிச்சயம் நாங்கள் வெல்வோம். இவ்வேளை திட்டமிட்ட வகையில் அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்ட எம்மக்களுக்கு உடனடி விமோசனம் பெற்றுக் கொடுப்போம் என கூறினார்.
இந்நிகழ்வில் ஐந்து சேவையாளர்கள் பாராளுமன்ற உறுப்பினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved