.

Home » » தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு ஆதரவாக களமிறங்கியதா :?

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு ஆதரவாக களமிறங்கியதா :?


ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தொடரின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவாவில் பிரசன்னமாகுவதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த நல்ல நிலையை நாடு தற்போது இருக்கும் நிலைமைக்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளும், மேற்கொள்ளத் தவறிய நடவடிக்கைகளும் மட்டுமே மூலகாரணம் என்பதை நாட்டுமக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
இனப்பிரச்சினைக்கான இறுதித்தீர்வை எட்டுவதில் எவ்வித தடையையும் அரச தரப்பு போடக்கூடாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது" எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஜெனீவாவில் பெப்ரவரி 27, 2012 தொடக்கம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மன்றத்தின் 19 ஆம் கூட்டத் தொடரிலே இலங்கை தொடர்பான விடயம் முக்கிய இடம் வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கை மற்றும் இலங்கை அரசினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஆகிய இரு அறிக்கைகள் சர்வதேச மனிதநேய மற்றும் மனித உரிமைகள் சட்டம் ஆகியவைகளை மீறியமை, இனப்பிரச்சினைக்கான காரணிகள், மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அரசியல்தீர்வொன்றை அடைதல், இராணுவமயமாக்குதலை நீக்குதல், துணை ஆயுதக்குழுக்களை கட்டுப்படுத்தல், குடியியல் நிர்வாகத்தை வலிவூட்டுவதற்கான அத்தியாவசியத் தேவை, தகவல் சுதந்திரம், ஊடக சுயாதீனம், தடுப்பு சம்பந்தமான வெளிப்படைத்தன்மை, மேலும் தடுத்துவைத்துள்ளவர்களைச் சந்திக்கும் சுயாதீனம் உட்பட வேறு விடயங்களையும் உள்ளடக்கியுள்ளன. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதித்துவப்படுத்தி நிற்கின்ற, இனப்பிரச்சினையினால் பிரதானமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த விடயங்கள் மிக முக்கியமானவைகளாகும். யுத்தமும் அது தொடரப்பட்ட முறையும் அவர்களுக்கு பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. 

இப்படியான விடயங்கள் கலந்துரையாடப்படும் எந்த தொடர் நிகழ்வுகளைப் பற்றியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நியாயமான கரிசனையைக் கொண்டுள்ளது. இந்த இரு அறிக்கைகள் தொடர்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டைப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளதுடன் அதன் நிலைப்பாட்டினை மீளவும் வலியுறுத்துகிறது. 

கடந்த ஆறு தசாப்த காலமாக இலங்கை அரசானது இலங்கைக்குள் இருக்கும் பல்தேசிய, பல்கலாசார பன்மைச் சமுகத்துக்கான தனது கடப்பாடுகளை நிறைவேற்றத் தவறியுள்ளமையும், சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் அது கைச்சாத்திட்டுள்ள சர்வதேச உடன்பாடுகள் ஆகியவைகளை மீறிச்செயற்படுவது கவலைக்குரிய விடயங்கள் என்பதையும், இதனால் தான் தற்போதைய நிலைமைக்கு இலங்கை முகம்கொடுக்க நேர்ந்துள்ளது என்பதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேலும் கூறிவைக்கிறது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய இலங்கைக்குள் நிலைத்து நிற்கத்தக்கதும் நடைமுறைக்கு ஏதுவானதுமான நேர்மையான அரசியற்தீர்வைக் கண்டடைவதற்கான தனது அர்ப்பணத்தைப் பகிரங்கமாகக் கூறிவந்துள்ளதுடன், அதனை அது மீளவும் வலியுறுத்துகிறது. ஒரு வருட காலத்துக்கு மேலாக அரசாங்கத்துடன் சேர்ந்து அத்தகைய தீர்வைக் கண்டடைவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆக்கபூர்வமான வழிமுறைகளிலே முயன்றும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அரசியற் தீர்வை கண்டடைவதிலே அரசுக்கு நேர்மையான அர்ப்பணிப்பு இல்லாமையினால் அது எவ்வித முன்னேற்றத்தையுமே காணவில்லை. 

தானே ஏற்றுக்கொண்ட பொறுப்புக்களை மீறுவதில் இலங்கை அரசாங்கம் பெயர்போனது. அதுமட்டுமன்றி, பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாட்டை பகிரங்க அறிக்கைகள் மூலமாக நிறைவேற்றுவதிலும் அது பெயர்போனது. 

தற்போது நிலவும் நிலையற்ற நிலைமை தொடருமேயானால் அது வன்முறைக்கு வித்திடலாம், குடிமக்கள் அதனால் மீண்டும் பாதிக்கப்படலாம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அஞ்சுகிறது. தற்போதைய சூழ்நிலையிலே அமைதி காக்கப்படுவதும், பிரச்சினைகளைத் தவிர்ப்பதும் அவசியமான செயற்பாடுகளென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுகிறது. 

எனவே, இந்தக் காரணங்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவாவில் பிரசன்னமாயிருக்க மாட்டாது எனத் தீர்மானித்துள்ளது. 

ஒட்டுமொத்த நல்ல நிலையை நாடு தற்போது இருக்கும் நிலைமைக்கு அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளும், மேற்கொள்ளத் தவறிய நடவடிக்கைகளும் மட்டுமே மூலகாரணம் என்பதை நாட்டுமக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். இனப்பிரச்சினைக்கான இறுதித்தீர்வை எட்டுவதில் எவ்வித தடையையும் அரச தரப்பு போடக்கூடாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது. 
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved