அமெரிக்காவின் உலக அமைதி நடவடிக்கை அமைப்பின் வளங்கள் மதிப்பீட்டு அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்கு உண்மை கண்டறியும் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
சிறிலங்காவிலுள்ள அமைதி ஆதரவு நடவடிக்கைப் பயிற்சி நிறுவனத்தின் அமைதிகாப்புப் பயற்சிகளின் தரம் தொடர்பாக மதிப்பீடு செய்யவே இவர்கள் கொழும்பு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப்பீடத்தின் பல்தேசிய பயிற்சிப் பிரிவின் தலைவர் ஸ்கொட் வெய்டி, தலைமையிலான இந்தக் குழுவில் ஐந்து பாதுகாப்பு அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவினர் நேற்றுமுன்தினம் சிறிலங்கா இராணுவத் தளபதியை கொழும்பில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இதன்போது, சிறிலங்கா இராணுவத்துக்கு ஐ.நா அமைதிப்படையில் பணியாற்ற மேலதிக படையினரை அனுப்புவதற்கு தயாராக இருப்பதாகவும் அதற்கு ஏற்பாடுகளைச் செய்யுமாறும் சிறிலங்கா இராணுவத் தளபதி கோரியுள்ளார்
குறுகியகால இடைவெளிக்குள் மருத்துவர்கள், பொறியியலாளர்கள், பெண் படையினரை உள்ளடக்கிய 3 பற்றாலியன் படையினரை அனுப்பத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுவினர் நேற்று குகுலேகங்கவில் அமைக்கப்பட்டுள்ள ஐ.நா அமைதிகாப்புப் படையில் பணியாற்றச் செல்லும் படையினருக்கான பயிற்சி முகாமுக்கும் சென்றிருந்தனர்.
போர் முடிவுக்கு வந்த பின்னர் சிறிலங்கா இராணுவம் அதிகளவு துருப்புகளை ஐ.நா அமைதிப்படைக்கு அனுப்பும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதும், இதுவரை அதற்கு ஐ.நாவிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.