.

Home » » தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் எதிர்க்கட்சிகளின் மே தின நிகழ்வு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் எதிர்க்கட்சிகளின் மே தின நிகழ்வு


யாழ்ப்பாணத்தில் எதிர்க்கட்சிகளின் மே தினம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் நடைபெறவுள்ளதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே தினத்தையொட்டி, எதிர்க்கட்சிகளினால் யாழ்ப்பாணத்தில் பொதுக்கூட்டமும், பேரணியும் நடத்துவதென முதன்மை எதிர்க்கட்சியான ஐ.தே.க வினால் முடிவெடுக்கப்பட்டிருந்தது. இதன்படி இந்த மே தினத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அத்துடன் கூட்டமைப்பை இணைத்துக் கொள்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில், நேற்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், மே தினம் குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இப்பேச்சுவார்த்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கலந்து கொண்டது. இதில், மே தினக் கூட்டமானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் நடைபெறவும், அதற்கான ஏற்பாடுகள் யாவையும் கூட்டமைப்பே மேற்கொள்ளவும் முடிவு எட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொதுக்கூட்டத்திற்காக போடப்படும் மேடையில் தனியொரு கட்சியை பிரதிபலிக்காது, பங்குகொள்ளும் அனைத்துக் கட்சிகளையும் பிரதிபலிக்கும் வண்ணம் கொடிகள் நாட்டப்படுவதாகவும், பேரணியிலும் அதேபோன்று நடைமுறைகளைக் கடைபிடிப்பதாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்துத்  தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் மேதினக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமயில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. இம்முடிவு கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களின் முடிவேயாகும்.

இதன்படி மே தினத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கூட்டமைப்பே மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார். அத்துடன், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தவும் அடிப்படைச் சம்பளம் 12, 500 ரூபாவாக வழங்கவேண்டும் எனவும், மீள்குடியேற்றம் குறிப்பிட்ட கால எல்லைக்குள் நிறைவுறுத்த வேண்டும் எனவும் அரசிற்கு கோரிக்கை விடுத்து கோஷம் எழுப்புவதாகவும் முடிவு செய்யப்பட்டது.

இதேவேளை, யாழ்ப்பாண நகரில் அல்லாது பிறிதொரு இடத்தில் மேதின நிகழ்வை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாநகராட்சி தற்போது ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அனுமதி பெறுவதில் தடங்கல்கள் ஏற்படும். இதன்காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள இடத்தில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved