2011 டிசம்பரில் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் பகுப்பாய்வின் முடிபு வெளியாகியுள்ளது. நாட்டின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில், யாழ்ப்பாண மாவட்டத்தின் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வீழ்ச்சி கண்டுள்ளதை அறிய முடிகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பரீட்சைப் பெறுபேறுகள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதைப் பகுப்பாய்வுகள் சுட்டி நிற்பதற்க யுத்தத்தின் கொடூரமே அதற்குக் காரணம் என்று சான்றுபடுத்த முடியும்.
ஆனால், யாழ்ப்பாண மாவட்டத்தில் பரீட்சைப் பெறுபேறுகள் வீழ்ச்சி அடைவதற்கான காரணம் என்னவென்பதை கண்டறிவது கட்டாயமானதாகும்.
இது விடயத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு, வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம், யாழ். மாவட்டத்தில் இயங்கும் கல்வி வலயங்கள் மற்றும் கல்வி அபிவிருத்திக் குழு என்பன இந்த ஆய்வில் ஈடுபட வேண்டும்.
ஆய்வின் முடிவுகள் பகிரங்கப்படுத்தப்படுவதுடன், அவை சீராக்கப்படுவதும் கட்டாயமானதாகும்.
அதேவேளை, யாழ்ப்பாண மாவட்டம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் ஏனைய மாவட்டங்களுக்கு விட்டுக்கொடுத்து இந்தளவு தூரம் வீழ்ச்சி கண்டதென்பதன் பின்னால், திட்டமிட்ட கல்விச் சீரழிப்புகள் உண்டென்றே எண்ணத் தோன்றுகிறது.
இதற்கு மேலாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெற்ற ஆசிரிய இடமாற்றத்தின் விளைவாக யாழ்ப்பாணக் கல்வி வீழ்ச்சி கண்டு விட்டதென்ற குற்றச்சாட்டுகளும், வலயக் கல்வி அலுவலகங்களில் நிலவும் வெற்றிடங்களை உடனுக்குடன் நிரப்பாமல் இழுத்தடிப்பது, வலயக் கல்விப் பணிப்பாளர் வெற்றிடம் ஏற்படும்போது வருடக் கணக்கில் அந்தப் பதவியை அப்படியே வெறுமையாக வைத்திருப்பது மற்றும், வடக்கு மாகாண நிர்வாகம் எல்லாவற்றுக்குள்ளும் மூக்கை நுழைத்து கல்வி வலயங்களை அதிகாரமற்ற அலுவலகங்களாக மாற்றியமை போன்றவற்றின் நேரடி விளைவுதான் இந்தக் கல்வி வீழ்ச்சி என்ற கடுமையான விமர்சனங்களும் உண்டு.
எதுவாயினும் எங்கள் அதிகாரிகள் வழமை போல் சலாம் போடுவதை நிறுத்தி உடனுக்குடன் பதில் கொடுக்கத் துணியவேண்டும். இல்லையேல் யாழ்ப்பாணத்தின் கல்வியை தூக்கி நிறுத்துவது முடியாத காரியமாகி விடும். கவனம்.