.

Home » » பொருளாதாரத் தடை இலங்கைக்கு ஏற்படலாம்!- இராஜதந்திரிகள் எச்சரிக்கை

பொருளாதாரத் தடை இலங்கைக்கு ஏற்படலாம்!- இராஜதந்திரிகள் எச்சரிக்கை


இலங்கைக்கு எதிராக உலக நாடுகள் பொருளாதாரத் தடையை விதிக்க கூடிய சாத்தியம் அதிகரித்து வருவதாக இராஜ தந்திரிகள் அரசுக்கு எச்சரிக்கை செய்துள்ளனர்.
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தொடரில், கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, போர்க்குற்ற விசாரணை மற்றும் இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் சாதகமான சமிக்ஞைகளை இலங்கை அரசு வெளியிடுமென்றே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்பார்த்தன.

ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக, இலங்கை அரசு தீர்மானத்தை கொண்டு வந்த அமெரிக்காவையும் அதனை ஆதரித்த இந்தியா உள்ளிட்ட நாடுகளையும் கடுமையாகக் சாடி வருகின்றது.

சிறிய நாடு ஒன்று ஐ.நா. தீர்மானத்தை கொச்சைப்படுத்தும் வகையில் செயற்படுவது அவ்வளவு நல்லதல்ல என்ற அடிப்படையிலும், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்தமைக்காக, இந்தியாவுக்கு எதிராக சீனாவுடன் நெருங்கிய தொடர்பை வலுப்படுத்த இலங்கை அரசு முயற்சிப்பதையும் அடுத்து, இலங்கை மீது பொருளாதாரத் தடையை விதிக்க அமெரிக்கா உத்தேசித்துள்ளதாக இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடையை விதிப்பதன் மூலம் இலங்கை மக்கள் தற்போது உள்ள ஆட்சியை மாற்றி அமைக்க முற்படுவர் என கருதப்படுவதாகவும், எந்நேரமும் பொருளாதாரத் தடைபற்றிய அறிவித்தல் வெளியாகலாம் என்பதால் இலங்கை அரசு தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என இராஜதந்திரிகள் அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved