அகிம்சா மூர்த்தி என்று உலகப் புகழ்பெற்ற அண்ணல் மகாத்மா காந்தியின் சிலை இலங்கைத்தீவில் மட்டக்களப்பு மண்ணில் உடைக்கப்பட்டுள்ளதெனில் அதன் பொருள் என்ன? ஓ! காந்தியை சுட்டுக்கென்ற கோட்சேயைவிட காந்தியின் சிலையை உடைத்ததன் மூலம் இலங்கை பெரும் கொடூரத்தை செய்துவிட்டது.
மகாத்மா காந்தி இந்த வையகத்திற்கு அகிம்சையின் பெருமையை புகட்டிய உத்தமர். அவரின் அகிம்சைப் போராட்டம் இந்திய தேசத்திற்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்தது என்பதற்கு அப்பால், விடுதலைப் போராட்டத்திற்குப் பின் அரசியலில் பிரவேசித்து ஆட்சிப் பதவியை பெற்றுக் கொள்ளாமல், ஓர் அகிம்சைவாதி எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை தன் வாழ்க்கையில் காட்டிநின்றதனாலேயே காந்தி, மகாத்மாவாகப் போற்றப்பட்டார்.
அத்தகைய உயர்வுமிக்க காந்தியை கோட்சே என்ற கொடியவன் சுட்டுக் கொன்றான். பாரத தேசத்திலிருந்து பாகிஸ்தான் பிரிபடுவதை ஏற்றுக்கொள்ளாத கோட்சே, காந்தியை சுட வேண்டும் என்று நினைத்தான் போலும். எனினும் கோட்சேயின் துப்பாக்கியிலிருந்து பீறிட்ட குண்டுகள் காந்தியை துளைத்தபோது தான் காந்தி மகாத்மாவாகினார்.
துப்பாக்கி ரவைகள் காந்திய துளைத்தபோது ரகுபதி ராகவ ராஜாராம் பதீதபாவன சீதாராம்... ராம்... ராம் என்ற இராமநாமத்தை காந்தி உச்சரித்தது மட்டுமல்லாமல், தன்னைக் கொன்றவனை மன்னிக்கும்படியும் கூறிக்கொண்டார்.
உயிர்வாழும் காலத்தில் காந்தியின் பெருமையை கோட்சே உணராதவனாக இருந்திருக்கலாம். ஏன்? பாரத மக்களில் பலர் காந்தியின் அகிம்சையை தெரியாதவர்களாகவும் இருந்திருக்கலாம்.
ஆனால் காந்தி உயிரிழந்த கணத்திலேயே அவர் உலக மக்களால் மகாத்மாவாக உணரப்பட்டார். அமெரிக்க தேசம் மகாத்மா காந்தியின் உருவச் சிலையை தன்மண்ணில் நிறுவிக் கொண்டது. காந்தியை கெளரவப்படுத்துவதற்காக என்று யாரும் நினைத்து விடக்கூடாது. மாறாக காந்தியின் சிலையை நிறுவி அமெரிக்க மக்களுக்கு அகிம்சையை உணர்த்த அத்தகையதொரு ஏற்பாடு.
இவ்வாறாக உலகம் உணர்ந்து கொண்ட மகாத்மா காந்தியின் சிலையை மட்டக்களப்பில் உடைத்தார்கள் என்பதை நினைக்கும்போது இதயம் வெடிக்கும்போல் இருக்கிறது.
உலக நாடுகள் அகிம்சா மூர்த்தி அண்ணல் காந்தியின் சிலையை தங்கள் மண்ணில் நிறுவி அதனூடு அகிம்சையைப் போதிக்கும் வேளையில், இலங்கைத் தீவில் மட்டக்களப்பு மண்ணில் காந்தியின் சிலை உடைக்கப்பட்டுள்ள தெனில் அதன் பொருள் என்ன?
ஓ! காந்தியை சுட்டுக்கென்ற கோட்சேயைவிட காந்தியின் சிலையை உடைத்ததன் மூலம் இலங்கை பெரும் கொடூரத்தை செய்துவிட்டது.