யாழ்.குடாக் கடலில் தங்கியிருந்து சங்கு மற்றும் கடலட்டை பிடிப்பதற்கு அனுமதி அளிக்குமாறு, தென்பகுதி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ள அதேவேளை, அதற்கெதிராக வடபகுதி கடற்றொழிலாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
யாழ்.குடா கடற்பகுதிகளில் சங்கு மற்றும் கடல் அட்டை பிடிப்பதற்கு தென்பகுதியைச் சேந்த 15 நிறுவனங்கள் யாழ்.கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திடம் அனுமதி கோரியுள்ளதாக, யாழ்.பிராந்திய கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
எனினும் குடாக்கடலில் உள்ள கடற்றொழில் சங்கங்கள் சம்மதித்தால் மட்டுமே இதற்கு அனுமதியளிக்க முடியும்.
கடந்த 30 வருடகாலமாக குடாக்கடலில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் தங்கள் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகையில் திடிரென தென்பகுதி நிறுவனங்கள் இந்தக் கடலில் சங்கு மற்றும் கடல் அட்டை பிடிப்பதற்கு அனுமதி கோரியிருப்பது ஆச்சரியப்பட வேண்டிய விடயம் என அவர் மேலும் தெரிவித்தார்.
தென்பகுதி கடற்றொழிலாளர்களின் இக்கோரிக்கை குறித்து, யாழ்.கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களில் சமாக பிரதிநிதிகளிடம் கேட்டபோது, கொதித்தெழுந்த அவர்கள் தென்னிலங்கை கடற்றொழிலாளர்களை யாழ்.குடாக்கடலில் அனுமதிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிவித்தனர்.
ஏற்கனவே பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள யாழ்.கடற்றெழிலாளர்களின் வயிற்றிலடிக்கும் இத்தகைய எந்தவொரு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும் அதனை இறுதிவரை எதிர்த்து கடற்றொழிலாளர்களைத் திரட்டிப் போராடுவோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்