கனடாவிற்கு கப்பல்களில் வரும் அகதிகள் மீது பாரபட்சமான விசாரணைகள் நடத்தப்படுவதை லிபரல் கட்சி கண்டிக்கின்றது. கனடா லிபரல் கட்சியின் மாநில மாநாட்டில் தலைவர் பாப் றே இவ்வாறு அறிவித்துள்ளார்
கனடாவிற்கு வருடாந்தம் ஆயிரக்கணக்கான அகதிகள் வந்தவண்ணம் உள்ளார்கள். எமது நாட்டிற்குள் அகதிகள் வந்து தகுந்த ஆதாரங்களோடு தங்கள் உண்மையான அரசியல் அகதிகள் என்று நிரூபிப்பதற்கு அவர்களுக்கு தகுந்த கால அவகாசம் வழங்கப்படுவதை நமது கட்சியின் தலைவராக இருந்த முன்னாள் பிரதமர் திரு ரூடோ கனடிய மனித உரிமைகள் சாசனத்தை அமுல் செய்ததன் மூலம் வகை செய்தார். இந்தச் சலுகையை கனடாவிற்கு அகதிகளாக வருகின்றவர்கள் கடந்த 30 ஆண்டு காலமாக பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் அண்மைக்காலமாக தற்போதைய கொன்சர்வேர்ட்டிவ் அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் இந்த நடைமுறையானது அரசாங்கத்தினாலும் குடிவரவு அமைச்சர் திரு ஜெய்சன் கென்னியாலும் மீறப்பட்டு வருகின்றது.
பல்வேறு நாடுகளிலிருந்தும் வரும் அகதிகள் வேறுபட்ட விதமாக விசாரிக்கப்பட்டு வருகின்றார்கள். அவர்கள் விசாரணைகளில் பாரபட்சம் காட்டப்படுகின்றதை எமது லிபரல் கட்சி நன்கு அவதானித்து வருகின்றது.
குறிப்பாக கனடாவிற்கு அகதி அந்தஸ்த்து கோரி ஆபத்தான கப்பல் பயணங்களை மேற்கொண்டு வரும் அகதிகளை கொன்சர்வேட்டிவ் அரசாங்கம் வேறு கண்கொண்டு பார்க்கின்றது. அவர்களை சில வேளைகளில் பயங்கரவாதிகள் என்றும் முடிவெடுக்கின்றார் அமைச்சர் ஜெய்சன் கென்னி. இந்தவகையான அரசாங்கத்தின் முடிவுகளை எமது லிபரல் கட்சி கண்டிக்கின்றது.”
இவ்வாறு கனடாவின் முக்கிய எதிர்க்கட்சியாக கருதப்படும் லிபரல் கட்சியின் தலைவர் திரு பாப் றே கடந்த சனிக்கிழமை கனடாவின் ரொரொன்ரோ மாநகரில் நடைபெற்ற கட்சியின் ஒன்றாரியோ மாநில மாநாட்டிற்கு தலைமை வகித்து உரையாற்றிய போது தெரிவித்தார்.
இவர் மேற்படி கருத்தினைக் கூறிய போது பல கனடியர்களும் எழுந்து நின்று தங்களை ஆதரவை தெரிவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
கனடா லிபரல் கட்சியின் மேற்படி மாநில மாநாட்டில் பல நகரங்களில் இயங்கும் லிபரல் கிளைகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்தனர். மேற்படி லிபரல் கட்சியின் பீச்சர்ஸ் ரொரென்ரோ கிழக்கு என்னும் தொகுதியில் கடந்த பல வருடங்களாக தலைவராக பணியாற்றிவரும் திரு கணேசன் சுகுமார், ஸ்காபுறொ ரூஜ் றிவர் தொகுதிக்கான லிபரல் கிளையில் பணிப்பாளராக கடமையாற்றிவரும் ஈழத்தமிழராக திரு லோகன் இராசையா, மார்க்கம் நகர சபை உறுப்பினர் திரு லோகன் கணபதி ஆகியோர் தலைவர் பாப் றேயினால் கௌரவிக்கப்பட்டனர்.
அங்கு உரையாற்றிய திரு பாப் றே
தற்போதைய கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் பல பிழையான கொள்கைகளை கண்டித்தார். குறிப்பாக பல மில்லியன் டாலர்கள் செலவு செய்து கொள்வனது செய்த விமானங்கள் வாங்குதலில் பல ஊழல்கள் இடம் பெற்றுள்ளதாகவும் தற்போது கனடாவின் முதியோர் ஓய்வூதியம் வழங்கும் வயதை 60 இலிருந்து 65 ஆக உயர்த்துவதற்கு கொன்சர்வேர்டிவ் கட்சி தீர்மானித்துள்ளதையும் அவர் கண்டித்தார்.
மேலும் தலைவர் திரு பாப் றே உரையாற்றும் போது “ எமது லிபரல் கட்சியானது நாட்டின் மீது பற்றுக் கொண்டவர்களை கொண்ட கட்சியாகும். எமது அங்கத்தவர்கள் தங்கள் கட்சியை மட்டும் விரும்பவில்லை. அவர்கள் கனடா என்னும் உலகில் மிகச் சிறந்த நாட்டையும் விரும்புகின்றார்கள். எனவே அவர்கள் அனைவரும் சேர்ந்து எதிர்காலத்தில் லிபரல் கட்சியை ஆட்சியில் அமர்த்த முன்வந்துள்ளார்கள்.
இந்த கனடா நாட்டில் முன்னாள் பிரதமர்களாக பணியாற்றிய லிபரல் கட்சியின் தலைவர்கள் அனைவரும் தங்கள் பணிகளைச் சிறப்பாகவே செய்து முடித்துவிட்டுப் போயுள்ளார்கள். குறி;ப்பாக லிபரல் கட்சியின் ஆட்சிக்காலத்தில் பாராளுமன்றத்தில் 30 வருடங்களுக்கு முன்னர் அமுல் செய்யப்பட்ட “கனடிய மனித உரிமைகள் சாசனம்” இந்த நாட்டிற்கு வருகின்ற அனைத்து இன மக்களையும் இங்கு ஏற்கெனவே வாழும் கனடியர்களோடு சரி சமனாக வாழ்வதற்கு வழி செய்துள்ளது” என்றார்.
மேற்படி மாநாட்டில் ஸ்காபுறோ அஜின்கோர்ட் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு ஜிம் கரிஜியானிஸ் முக்கிய பங்கு வகித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.