கனடாவில் இருந்து சுவிட்சர்லாந்து சென்று கொண்டிருந்த விமானத்தில், விமானி தன்னை அறியாமல் சிறிது நேரம் தூங்கி உள்ளார்.
கடந்தாண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி ரொறொண்டோவில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு சென்று கொண்டிருந்த AC 878என்ற விமானத்தில், விமானத்தை ஓட்டிக் கொண்டிருந்த நேரத்தில் தன்னையும் அறியாமல் சிறு தூக்கம் போட்டிருக்கிறார் ஏர் கனடா விமானி.
அதன் பின் விழித்த இவர், விமானத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்ற குழப்பத்தில் திடீரென தலைகீழாக செங்குத்தாக ஓட்டியுள்ளார்.
இது அந்த விமானத்தில் பயணம் செய்தவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று $20 மில்லியன் தொகையை இழப்பீடாக ஏர் கனடா வழங்க வேண்டும் என்று கோரி பயணிகள் இருவர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
எதிர்பாராத சூழ்நிலைகளில் விமானத்தைக் கட்டுப்படுத்தவே விமான ஓட்டி அவ்வாறு ஓட்டியதாக முதலில் ஏர் கனடா விளக்கமளித்தது.
ஆனால் சிறு தூக்கத்திலிருந்து விமான ஓட்டி திடிரென விழித்ததால் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என போக்குவரத்து பாதுகாப்பு குழுமம் தெரிவித்துள்ளது.
திடீரென சிறு தூக்கத்திலிருந்து விழித்த விமான ஓட்டி தன் கண்ணுக்குத் தெரிகின்ற தூரத்தில் மற்றுமொரு விமானம் வந்து கொண்டிருப்பதை பார்த்ததாகவும், இரண்டும் மோதி விடக் கூடும் என்பதால் திடீரென கட்டுப்பாட்டை இழந்து குழப்பத்தில் தலைகீழாக ஓட்டியுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
இதனால் அந்த சமயத்தில் விமானத்தில் பயணம் செய்த இருக்கை வார் அணியாத 14 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
இருப்பினும் இதுவரையிலும் சம்பவத்திற்கான உண்மைக் காரணத்தினை ஏர் கனடா வெளியிடவில்லை. எனினும் வழக்குத் தொடர்ந்துள்ளவர்களுடன் பேசி ஒரு முடிவுக்கு வர ஏர் கனடா தீவிர முயற்சியெடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.