சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்களெனவும், திருகோணமலை பொது வைத்தியசாலை வளவிலுள்ள பிள்ளையார் கோவில் உடைப்பு விடயத்தில் நீதியான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமெனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேற்று பாதுகாப்புச் செயலாளரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
திருகோணமலையில் கடந்தவாரம் திடீரென தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப் பட்டமை மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது என இங்கு குறிப்பிட்டிருக்கும் சம்பந்தன், கைதுசெய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டுமென வலியுறுத்திக் கூறியுள்ளார்.
அதேசமயம், திருகோணமலை பொது வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள பிள்ளையார் கோவிலின் ஒரு பகுதி உடைக்கப்படுவது குறித்தும் பாதுகாப்புச் செயலரின் கவனத்திற்குக் கொண்டுவந்த சம்பந்தன், அதற்கும் நீதியான தீர்வு கிடைக்கப்பெற வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவர் திருமலையில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னணியில் இவ்வாறான கைதுகள் இடம்பெற்றுள்ளன எனவும், புலிகள் இயக்கத்தில் இருந்து விலகிய முன்னாள் உறுப்பினர்கள் புனர்வாழ்வு அழிக்கப்படாமல் இருந்தால் அவர்களுக்குப் புனர்வாழ்வளிப்பது குறித்து அரசு ஆராய்ந்து வருவதால் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்படுவார்களென்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய இதன்போது சம்பந்தனிடம் உறுதியளித்துள்ளார்.
பிள்ளையார் கோவிலின் ஒரு பகுதி உடைக்கப்படும் விவகாரம் குறித்து இங்கு கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்புச் செயலர், இந்தப் பிரச்சினைக்கு ஏதுவாக இருக்கும் பாதைக்குரிய காணி வைத்தியசாலைக்கே ஒப்படைக்கப்படுமென்று உறுதியளித்துள்ளார்.
இதனால் குறிப்பிட்ட பாதை சம்பந்தமான விதிகள் குறித்தான பிரச்சினை எழாதபடி இந்தப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளலாமெனவும் பாதுகாப்புச் செயலர் இங்கு குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட சம்பந்தன், இந்த விடயங்கள் தொடர்பில் கூட்டமைப்பு தொடர்ந்து கவனம் செலுத்திக் கொண்டிருக்குமெனத் தெரிவித்தார்.