ஏ.சி. வகுப்பில் பயணிக்கும் ரயில் பயணிகள் கட்டாயம் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். இந்தப் புதிய விதிமுறை வரும் பிப்ரவரி 15 ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுவரை தத்கல் முறையிலும், இணையதள வழியிலும் டிக்கெட் பெற்றவர்களே அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்ற நிலையிருந்தது. இப்போது ஏ.சி. வகுப்புப் பயணத்துக்கும் இந்த விதி விரிவாக்கப்பட்டுள்ளது. குழுவாகச் செல்லும்போது யாரேனும் ஒருவர் அடையாள அட்டை வைத்திருந்தாலே போதுமானது.
வாக்காளர் அட்டை, நிரந்தரக் கணக்கு எண் அட்டை (பான்கார்டு), பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், புகைப்படத்துடன் கூடிய தேசிய வங்கி கணக்குப் புத்தகம், புகைப்படத்துடன் கூடிய கடன் அட்டை, புகைப்படத்துடன் கூடிய மாணவர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயணிப்பவர் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆள்மாறாட்டம் செய்வது, கள்ளச் சந்தையில் டிக்கெட் விற்பது, இடைத்தரகர்களின் செயல்பாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2008 09ம் ஆண்டில் ஆள்மாறாட்டம் செய்ததாக 20,240 வழக்குகள் பதிவாகி 2521 பேர் கைது செய்யப்பட்டனர். இதுவே 2010 11ல் 63,854 வழக்குகள் பதிவாகி 2480 பேர் கைது செய்யப்பட்டனர். அடையாள அட்டையை கட்டாயமாக்குவதன் மூலம் இதுபோன்ற சம்பவங்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிடும் என்றும் அந்த ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.
அடையாள அட்டை கட்டாயம் என்ற செய்தி டிக்கெட்டுகளில் இடம் பெறும் வகையில், மென்பொருளில் மாற்றம் செய்யுமாறு ரயில்வே தகவல் மையம் (சிஆர்ஐஎஸ்) கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.