.

Home » » திருப்பி தாக்குமா இந்தியா *ஆஸ்திரேலியாவுடன் இன்று "டுவென்டி-20'

திருப்பி தாக்குமா இந்தியா *ஆஸ்திரேலியாவுடன் இன்று "டுவென்டி-20'


சிட்னி: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதலாவது "டுவென்டி-20' போட்டி இன்று சிட்னியில் நடக்கிறது. டெஸ்ட் தொடரில் சந்தித்த தோல்விக்கு, இம்முறை இளம் இந்திய அணி பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிது. 
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி இரண்டு "டுவென்டி-20' போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் போட்டி, சிட்னியில் இன்று துவங்குகிறது. 
இளம் அணி:
 இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பொறுப்பாக செயல்பட வேண்டும். துவக்கத்தில் சேவக், காம்பிர் அதிரடியாக ரன் சேர்த்தால் நல்லது. சுரேஷ் ரெய்னா, பார்த்திவ் படேல், ரோகித் சர்மா, மனோஜ் திவாரி, பிரவீண்குமார், இர்பான் பதான், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட இளம் வீரர்களின் வரவு மாற்றத்தை ஏற்படும் என எதிர்பார்க்கலாம். 11 பேர் கொண்ட அணியில் மனோஜ் திவாரி, பார்த்திவ் படேல் இடம் பிடிப்பது கடினம். இங்கிலாந்துக்கு எதிரான "டுவென்டி-20' போட்டியில் அசத்திய ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். "மிடில் ஆர்டரில்' ரெய்னா, விராத் கோஹ்லி, கேப்டன் தோனி, ஜடேஜா களமிறங்குவார்கள்.
வேகத்தில் ஜாகிர் கான், பிரவீண்குமார், உமேஷ் யாதவ் அசத்த வேண்டும். இர்பான் பதானும் மிரட்டலாம். அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, "சுழலில்' சாதிக்க தயாராக உள்ளனர். 
வருகிறார் பிரட் லீ:
ஆஸ்திரேலிய அணி ஜார்ஜ் பெய்லே தலைமையில் களமிறங்குகிறது. பாண்டிங், மைக்கேல் கிளார்க், பீட்டர் சிடில், ஹில்பெனாஸ், ரியான் ஹாரிஸ் ஆகியோ இடம் பெறவில்லை. நீண்ட இடைவேளைக்கு பின் அனுபவ வீரர் பிரட் லீ விளையாட உள்ளார். தவிர, ஜேம்ஸ் பலுக்னர், "பிக்-பாஷ்' "டுவென்டி-20'யில் அசத்திய டேனியல் கிறிஸ்டியன் ஆகியோர் பவுலிங்கில் கலக்க உள்ளனர். தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வரும் ஷேன் மார்ஷ் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு எழுச்சி பெறுவார் என தெரிகிறது.
அசத்தும் வீரர்கள்: 
"டுவென்டி-20' போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றுள்ளவர்களில் பெரும்பாலோனார் "ஆல்-ரவுண்டர்களாக' உள்ளனர். எனவே, இந்திய அணி கூடுதல் முயற்சி செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். 


இதுவரை 
இந்திய அணி 32 "டுவென்டி-20' போட்டியில் விளையாடி, 16 முறை வெற்றி பெற்றுள்ளது. சமீபத்தில் நடந்த மூன்று தொடரில் தொடர் தோல்வியை சந்தித்துள்ளது. இதில் இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு முறையும் (2011, 2012), வெஸ்ட் இண்டீசிற்கு (2009) எதிராக ஒரு முறையும் அடங்கும். 

மழை வருமா? 
போட்டி நடக்கும் சிட்னியில் வெப்பநிலை அதிகபட்சமான 21 டிகிரி, குறைந்த பட்சம் 19 டிகிரியாக இருக்கும். மழை பெய்வதற்கான 100 சதவீத வாய்ப்பு உள்ளது. 

இது வரை...
 நான்கு "டுவென்டி-20' போட்டிகளில் விளையாடி உள்ள இந்தியா(டர்பன் 2007, மும்பை 2007), ஆஸ்திரேலிய(மெல்போர்ன் 2008, பிரிஜ்டவுன் 2010) அணிகள் தலா இரு முறை வெற்றி பெற்றுள்ளன.

அதிகபட்ச ஸ்கோர்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி அதிகபட்சமாக 188/5 (டர்பன், 2007) ரன்கள் எடுத்துள்ளது. குறைந்த பட்சம் 74/10 (மெல்போர்ன், 2008)ரன்கள் எடுத்துள்ளது. 

பதவி விலக தயார்
டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக தயார் என தோனி தெரிவித்தார். இவர் கூறுகையில்,""கேப்டன் பதவி யாருக்கும் சொந்தமில்லை. இது கூடுதல் சுமை தான். இதில், ஒட்டிக் கொண்டிருக்க நான் விரும்பவில்லை. எனக்கு மாற்றாக சிறந்த வீரர் கிடைக்கும்பட்சத்தில், அவர் தாராளாக கேப்டன் பதவிக்கு வரலாம்,'' என்றார். 

"லக்கி' கேப்டன் 
அறிமுகமான முதல் போட்டியிலேயே ஜார்ஜ் பெய்லே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சர்வதேச போட்டியில் விளையாடாமல், முதல் போட்டியிலேயே கேப்டனாக நியமிக்கப்பட்ட இரண்டாவது வீரர் என்ற பெருமை பெற்றார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் டேவ் கிரகரி(1877, எதிர்- இங்கிலாந்து) உள்ளார். 
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved