பாகிஸ்தானிலிருந்து நேற்றைய தினம் நாடு திரும்பியிருந்து இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாளை சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
சிங்கப்பூர் அதிபரின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக மகிந்த ராஜபக்ச அங்கு செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதி, அதிகாரபூர்வ அழைப்பின் பேரில் சிங்கப்பூருக்கு பயணத்தை மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.
இந்தப் பயணத்தின் போது மகிந்த ராஜபக்ச இருதரப்பு விவகாரங்கள் குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லூங்குடன் பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை ஜனாதிபதியுடன், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் ஆலோசகர் சஜின் வாஸ் குணவர்த்தன, ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலர் சேனுகா செனிவிரத்ன ஆகியோரும் சிங்கப்பூர் செல்லவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடருக்கு முன்பாக இடம்பெறும் ஜனாதிபதியின் அவசர பயணங்கள், இலங்கையின் போர்க்குற்றங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஆதரவைத் தேடிக்கொள்ளும் நடவடிக்கையே என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.