தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாகவே அழித்துவிட்டோமென பெருமிதம் கொள்ளுகின்ற ஜனாதிபதி மகிந்த, புலிகளை மறப்பதற்கும் மனம் இல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு புலிகளைவிட கடும்போக்காக நடந்துகொள்கிறார்கள் என அடிக்கடி கூறிக் கொள்கிறார் என பா.உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
மட் அமிர்தகழி மெதடிஸ்த முன்பள்ளியின் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் மேலுள்ளவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மரண தண்டனையும் பெற்றுள்ளார்கள் எனவே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கூறுகின்ற ஆயுள் தண்டனையைக் கண்டு நாங்கள் ஒரு போதும் அஞ்சப்போவதில்லை.
ஜோசப் பரராசசிங்கம், ரவிராஜ் போன்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை இல்லாதொழிக்கலாம் ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் தமிழ் மக்களின் தேசிய உணர்வையும் யாராலும் ஒருபோதும் அழிக்கமுடியாது இவற்றை முதலில் இந்த இனவாதக் கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தரத் தீர்வை வழங்காமல் இழுத்தடிக்கும் செயற்பாட்டின் வெளிப்பாடே ஜனாதிபதியின் இவ்வாறான கூற்றுக்களில் இருந்து நாம் அறியக்கூடியதாக இருக்கின்றது என குறிப்பிட்டார்.
மேலும், தமிழ் மக்கள் கல்வியில் முன்னேற்றமடைய வேண்டும் இதற்காக மாணவர்களை முன்பள்ளி தொடக்கம் பல்கலைக் கழகம் வரை பெற்றோர்கள் கண்காணித்து வழிநடாத்த வேண்டும். ஒரு மாணவன் முன்பள்ளியில் கற்றுக்கொள்கின்ற நற்பண்புகளே அவனை ஒரு தலை சிறந்த பிரசையாக மாற்றுகின்றது.
எமது கலாச்சாரம் திட்டமிட்ட வகையில் சீரழிக்கப்படுகின்றது இதைக் காப்பாற்ற சகலரும் ஒன்றிணைந்து செயற்பட வெண்டும் குறிப்பாகப் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளிடத்தில் அதிக கவனம் செலுத்தி அவர்களை நன்றாக வழிநடாத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.