இலங்கை போரின் இறுதிக் கட்ட காட்சிகளை சனல் 4 டிவி ஒளிப்பரப்பியது. இதனை கண்டு தமிழ் மக்கள் உண்மையான கண்ணீர் வடிக்கின்றனர். ஆனால் அக்காட்சிகளை கண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியும், இந்நாள் முதல்வர் ஜெயலலிதாவும் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
இலங்கை போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரனையும், மற்றவர்களையும் சிங்கள இனவெறியர்கள் கொடூரமாக கொலை செய்த காட்சியை சேனல் 4 டிவி ஒளிபரப்பியது.
இக்காட்சியை கண்ட ஒட்டு மொத்த உலகத் தமிழர்களும் உண்மையான கண்ணீர் வடிக்கின்றனர். ஆனால் தன்னை தமிழினத் தலைவர் என்று கூறிக் கொள்பவரும், தமிழக முதல்வரும் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.
இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது உலகில் தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகளை பயன்படுத்தி ஈழத் தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர். இதனை தடுத்து நிறுத்தமாறு உலகத் தமிழர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் கருணாநிதியோ காலை உணவை சாப்பிட்டுவிட்டு வந்து உண்ணாவிரதம் இருந்தார்.
3 மணி நேரத்திற்கு பிறகு போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று கூறி மதிய உணவு நேரத்தின் போது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். ஆனால் அதன் பின்னும் குண்டு வீசப்பட்டது. இது குறித்து கேட்டபோது மழை வி்ட்டும் தூவானம் விடவில்லை என்று கருணாநிதி கூறினார்.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதா கூறுகையில், இருத்தரப்பினர் இடையே போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் சிலர் கொல்லப்படுவது இயல்பு தான் என்றார். ஈழத் தமிழர்களை காக்க இவர்கள் இருவரும் புதிய அவதாரம் எடுத்தது போல நாடகமாடுகின்றனர்.
அமெரிக்கா தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா செயல்பட வேண்டும். இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பதாக மத்திய அரசு உறுதி அளிப்பதை தவிர, வேறு எந்த அறிவிப்பாலும் எங்களை சமாதானப்படுத்த முடியாது என்று நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார். இதுவும் நாடகமாக இருந்து விடக்கூடாது.