.

Home » » இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் தான் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற முடியும்! முன்னாள் ஐ.நா. உதவிச் செயலர் ஹோம்ஸ்

இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் தான் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற முடியும்! முன்னாள் ஐ.நா. உதவிச் செயலர் ஹோம்ஸ்


இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் போர்க்காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்த விவகாரங்களில் பொறுப்புகூறுவது குறித்த பிரச்சினையில் முன்னேற்றம் காணமுடியும் என்று மனிதாபிமான விவகாரங்களுக்கான முன்னாள் ஐ.நா உதவிச்செயலர் ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார்.
பிபிசிக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையில் நடந்த மனிதஉரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக சமூகமும் ஐ.நாவும் இன்னும் அதிகமாக பணியாற்ற வேண்டும் என்று எழும் கருத்துக்கள் தொடர்பாக எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த, அவர்,

இதைவிட அதிகமாக என்ன செய்ய முடியும் என்று கூறுவது தற்போதைக்கு கடினமாக இருக்கிறது.

ஐ.நா பொதுச்செயலர் நியமித்த வல்லுநர்கள் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்து விட்டது. அது வெளிப்படையாக பொதுமக்கள் பாவனையில் இருக்கிறது.

இப்போது மேலதிகமாக ஏதாவது செய்ய வேண்டும் என்றால் அதற்கு இலங்கை அரசின் ஒத்துழைப்பு கிடைக்காது என்பது தான் இப்போதுள்ள பிரச்சினை.

இந்த விசாரணைகள் மூலம் அனைத்துலக நாடுகள் தன்னைக் குறிவைப்பதாக இலங்கை அரசு நம்புகிறது. அவர்களை இதில் யாரும் குறிவைக்கவில்லை.

ஆனால் அவர்களின் கடந்தகால நடவடிக்கைகள் தான் இந்த விசாரணைகள் கவனம் செலுத்தும் கருப்பொருள். எனவே அவர்கள் இந்த முயற்சிகளுக்கு, அதாவது ஒரு புதிய விசாரணைக்கு, முழுதாக ஒத்துழைக்கமாட்டார்கள்.

எனவே நாம் இந்த அரசு மாறும் வரை பொறுத்திருக்க வேண்டும். அதன் பின்னர் வரும் புதிய அரசில் இருப்பவர்கள் இதற்கு ஒத்துழைத்தால் தான் நாம் உண்மைகளை வெளிக்கொண்டு வரலாம்.

ஆட்சியில் இருக்கும் அரசு ஒத்துழைக்கவில்லை என்பதற்காக, அனைத்துலக சமூகம் அமைதியாக இருந்து விடவில்லை.

ஐ.நா வல்லுநர் குழு இது தொடர்பாக தனது அறிக்கையை சமர்பித்தது. பல தன்னார்வக் குழுக்கள் அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஒரு அறிக்கை தந்திருக்கிறது.

சனல் 4 தொலைகாட்சியின் விவரணப்படம் கூட இதன் ஒரு அங்கம் தான். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை இதை ஒருமுறை ஆராய்ந்திருக்கிறது. எனவே அனைத்துலக கவனம் இதில் இருக்கிறது.

இங்குள்ள பிரச்சினை என்னவென்றால் இந்தப் பிரச்சினைகள் நடந்த இடத்தில் இருக்கும் அரசு ஒத்துழைக்க மறுக்கிறது.

இது கவலையளிக்கும் ஒரு விடயம். ஆனால் அதுதான் தற்போதைய யதார்த்தம்.

ஒரு இறையாண்மை பெற்ற அரசை அந்த அரசின் விருப்பத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா வற்புறுத்த முடியாது.

இலங்கை விவகாரத்தில் ஐ.நா பாதுகாப்பு சபையில் கருத்தொற்றுமை இல்லை. ரஷ்யாவும் சீனாவும் இந்த விடயத்தில் பாதுகாப்புச்சபையை கூட்டுவதற்கு தயாராக இல்லை.

ஐ.நாவின் உறுப்பு நாடுகளிடையே கருத்தொற்றுமை இல்லாத நிலையில், ஐ.நாவால் நடவடிக்கை எடுக்க முடியாது.

பொதுமக்கள் உயிர்ச்சேதங்களைத் தவிர்க்கும் நோக்கத்தில், இலங்கை அரசை, அந்த யுத்தப்பகுதியில் கனரக போர் ஆயுதங்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு ஐ.நா வற்புறுத்திக் கொண்டிருந்தது.

இலங்கை அரசோ அந்தப் பகுதியில் சாதாரண பொதுமக்கள் கொல்லப்படவில்லை என்றே கூறிக் கொண்டிருந்தது. ஆனால் அது உண்மையல்ல.

அதேசமயம், விடுதலைப் புலிகளிடமும், சாதாரண பொதுமக்களை விடுவியுங்கள் என்று ஐ.நா கூறிக்கொண்டிருந்தது, ஏனென்றால் அதுவும் ஒரு அடிப்படையான பிரச்சினை. சாதாரண மக்களை அவர்களின் விருப்பத்துக்கு எதிராக அங்கே பிடித்து வைக்கப்பட்டிருந்தார்கள்.

ஐ.நா தன்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து கொண்டிருந்தது. ஆனால் ஐ.நாவிடம் ஒரு அதிசயத் தீர்வு இருந்தது என்ற கருத்து உண்மையான கருத்தல்ல.

ஐ.நா தமிழ் மக்களுக்கு பெரிய அளவில் உதவியிருக்கிறது. ஐ.நா தான் இலங்கை அரசிடம் பேசி, போர் நடந்த பகுதிகளிலிருந்து வெளியேறும் மக்களுக்கு நிவாரண முகாம்களை அமைக்குமாறு வலியுறுத்தியது.

அங்கே அவர்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்பது போன்ற பிரச்சினைகள் இருக்கத் தான் செய்தன. அந்தப் பிரச்சினைகளுக்கு ஒரு சில மாதங்களில் தீர்வு காணப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் வீடுகளுக்கு இப்போது திரும்பி விட்டார்கள் என்று தெரிவித்துள்ளார் ஜோன் ஹோம்ஸ்.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved