விசாகப்பட்டனம்:ஐ.பி.எல்., பரபரப்பான லீக் போட்டியில், கடைசி பந்தில் ரோகித் சர்மா சிக்சர் விளாச, மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் "திரில் வெற்றி பெற்றது. டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் போராட்டம் வீணானது.
ஐ.பி.எல்., "டுவென்டி-20 தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று விசாகப்பட்டனத்தில் நடந்த லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதின. விரல் காயம் குணமடையாத நிலையில் மும்பை அணியில் சச்சின் இடம் பெறவில்லை. "டாஸ் வென்ற டெக்கான் கேப்டன் சங்ககரா, "பேட்டிங் தேர்வு செய்தார்.
தவான் அதிரடி:
முனாப் படேல் பந்துவீச்சில் டெக்கான் அணி துவக்கத்தில் திணறியது. இவரது "வேகத்தில் பார்த்திவ் படேல்(1), சிப்லி(1) அவுட்டாகினர். ஷிகர் தவான் அதிரடியாக ரன் சேர்த்தார். முனாப், மலிங்கா பந்துகளை சிக்சருக்கு அனுப்பினார். ஓஜா "சுழலை ஒருகை பார்த்த இவர், இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி அடிக்க, அந்த ஓவரில் மட்டும் 18 ரன்கள் எடுக்கப்பட்டன. இந்த நேரத்தில் மலிங்கா பந்தில் தவான் 41 ரன்களுக்கு( 2 பவுண்டரி, 4 சிக்சர்) அவுட்டாக, மும்பை அணியினர் நிம்மதி அடைந்தனர்.
பின் கிறிஸ்டியன், சங்ககரா சேர்ந்து பொறுப்பாக ஆடினர். போலார்டு ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார் கிறிஸ்டியன். சங்ககரா(14), சர்ச்சைக்குரிய முறையில் வெளியேறினார். அடுத்து வந்த காமிரான் ஒயிட் அதிரடியில் மிரட்டினார். ஹர்பஜன், மலிங்கா பந்துகளை சிக்சருக்கு விரட்டினார். ஓஜா சுழலில் கிறிஸ்டியனும் சிக்சர் அடித்தார். இவர் 39 ரன்களுக்கு முனாப் "வேகத்தில் வெளியேறினார். டெக்கான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்தது. ஒயிட்(30) அவுட்டாகாமல் இருந்தார்.
மும்பை சார்பில் அபாரமாக பந்துவீசிய முனாப் படேல் 4, மலிங்கா 3 விக்கெட் கைப்பற்றினர்.
ஸ்டைன் அசத்தல்:
சுலப இலக்கை விரட்டிய மும்பை அணி துவக்கத்தில் தடுமாறியது. ஸ்டைன் பந்தில் அவரிடமே "கேட்ச் கொடுத்து சுமன்(5) வெளியேறினார். தொடர்ந்து "வேகத்தில் மிரட்டிய ஸ்டைன், "ஆபத்தான ரிச்சர்ட் லீவியை(3) போல்டாக்கினார். அமித் மிஸ்ரா "சுழலில் அம்பதி ராயுடு(19) சிக்கினார். 3 சிக்சர் விளாசிய போலார்டு 24 ரன்களுக்கு நடையை கட்டினார். ஒருபக்கம் விக்கெட் சரிந்தாலும் மறுபக்கம் பொறுப்பாக ஆடிய ரோகித் சர்மா, அமித் மிஸ்ரா பந்தை சிக்சருக்கு விரட்டி அரைதம் எட்டினார். இதே ஓவரில் இன்னொரு சிக்சர் அடித்து நம்பிக்கை தந்தார். போட்டியின் 19வது ஓவரை துல்லியமாக பந்துவீசிய ஸ்டைன், தினேஷ் கார்த்திக்கை(7) வெளியேற்றியதோடு 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
"டென்ஷன் ஓவர்:
கடைசி 6 பந்தில் மும்பை அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டன. கிறிஸ்டியன் சொதப்பலாக பந்துவீசினார். முதல் பந்தில் பிராங்க்ளின் பவுண்டரி அடித்தார். இரண்டாவது பந்தில் 2 ரன். மூன்றாவது பந்தில் ஒரு ரன். நான்காவது பந்தில் ரோகித் சர்மா சிக்சர் அடிக்க, "டென்ஷன் எகிறியது. ஐந்தாவது பந்தில் 2 ரன். கடைசி பந்தில் ரோகித் சர்மா ஒரு "சூப்பர் சிக்சர் அடிக்க, மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்து "திரில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 73(4 பவுண்டரி, 5 சிக்சர்), பிராங்க்ளின் 7 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆட்ட நாயகன் விருதை ரோகித் சர்மா வென்றார்.
சங்ககரா "அவுட் சர்ச்சை
சங்ககரா "அவுட் தொடர்பாக அம்பயர்கள் செய்த தவறு பெரும் சர்ச்சையை கிளப்பியது. போட்டியின் 13வது ஓவரை மும்பை வீரர் முனாப் வீசினார். இதன் மூன்றாவது பந்தில் சங்ககரா(14), போல்டானார். ஆனால், பந்து, விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கின் கால் "பேடில் பட்டு "பெயில்சை தகர்த்ததாக கூறி களத்தில் இருந்த அம்பயர்கள் ஜோகன் குளோட்(தென் ஆப்ரிக்கா), ஏ.கே.சவுத்ரி(இந்தியா) "அவுட் தர மறுத்தனர். ஆத்திரமடைந்த மும்பை கேப்டன் ஹர்பஜன், முனாப் ஆகியோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மூன்றாவது அம்பயரிடம் கேட்கும்படி வலியுறுத்தினர். இதற்கு மறுத்த அம்பயர்கள், பின் மும்பை வீரர்களின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்தனர். "ரீப்ளேயில் பந்து நேராக "பெயில்சை தகர்த்தது தெளிவாக தெரிய, சங்ககராவுக்கு "அவுட் கொடுக்கப்பட்டது.