.

Home » » வழக்குப் போடு! அல்லது விடுதலை செய்! - ஆயுத பூமியில் அமைதிப் போர்!

வழக்குப் போடு! அல்லது விடுதலை செய்! - ஆயுத பூமியில் அமைதிப் போர்!


ஓர் இனப் படுகொலை நிகழ்ந்து மூன்று ஆண்டுகள் முடிந்து விட்டன. ஒரேநாளில், பல்லாயிரம் தமிழர்கள் சிங்கள இராணுவத்தினரால் பலியாக்கப்பட, முள்ளிவாய்க்கால் பிண வாய்க்காலாக மாறியது.

இன்றும் அந்த மண்ணில் இரத்த வாடை. அந்த மே 18-ம் தேதியை மூன்றாம் ஆண்டு தமிழர் துயர தினமாக தமிழர்கள் அனுசரிக்க, அதே தினத்தைச் சிங்களத்தின் வெற்றி தினமாகக் கொண்டாடியது சிங்கள அரசு.

தமிழரைக் கொன்ற சிங்கள இராணுவத் தளபதிகள் திரண்டிருந்த கொழும்பு காலிமுகத்திடலில் பேசிய இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச, ''விடுதலைப் புலிகளை அழிக்க உலக நாடுகள் பலவும் இலங்கைக்கு உதவவில்லை.

அதனால் வெளிநாடுகளின் பேச்சைக் கேட்டுக்கொண்டு வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இராணுவத்தினரை எல்லாம் விலக்கிக்கொள்ள முடியாது.

இலங்கையில் எல்லா இனங்களும் மரண பயம் இன்றி சுதந்திரமாக வாழக்கூடிய சூழ்நிலை இப்போது உருவாக்கப்பட்டு உள்ளது. பிறந்த குழந்தைகளுக்கு நல்ல வருங்காலத்தை உருவாக்கி இருக்கிறோம் என்று, வெற்றி முழக்கம் செய்து இருக்கிறார்.

இன்றைய நிலைமை, தமிழர் வாழ்வுக்குப் பாதுகாப்பாக இல்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக இலங்கை வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மே 17-ம் தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய நாம் தமிழர் கட்சியின் மாநிலக் கொள்கை பரப்புரையாளர் ஜெயசீலன்,

மூன்று வருடங்களாகத் தமிழ் அரசியல் கைதிகள் சுமார் 4,500 பேர் யாழ்ப்பாணம், கொழும்பு மகசின் சிறை, நீர்கொழும்பு, அனுராதாபுரம், வவுனியா உள்ளிட்ட சிங்கள இராணுவ முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

போரின்போது தாமாகவே முன்வந்து கைதான போராளிகளும் இங்குதான் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்குச் சிங்கள இராணுவம், புலனாய்வுத் துறை மற்றும் காவல்துறை இணைந்து செய்யும் கொடுமைகள் வெளி உலகுக்கோ, மனித உரிமை அமைப்புகளுக்கோ, இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளுக்கோ தெரிவதில்லை.

சிங்கள அரசுக்குப் பல முனைகளில் அற வழியாக கோரிக்கைகளைத் தெரிவித்தார்கள். ஆனால் இவர்களுக்கான கொடுமைகள் அதிகரிக்கப்பட்டதே தவிர, நிறுத்தப்படவில்லை.

அதனால் வேறு வழியே இல்லாமல் அரசியல் கைதிகளாகக் கைது செய்யப்பட்ட போராளிகளில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கொழும்பு சிறைகளிலும், வவுனியா முகாமிலும் உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளனர்.

சர்வதேச நீதிநெறிகளுக்குப் புறம்பாக சிங்கள அரசும் இராணுவமும் இவர்களைச் சிறைப்படுத்திக் கொடுமை செய்கிறார்கள். அவர்களுக்குப் போதுமான உணவு, உடை மற்றும் மருத்துவ வசதிகள் செய்துதரப்படவில்லை.

விசாரணை என்ற பெயரில் உடலில் மின்சாரம் பாய்ச்சுவது, ஆடைகளை அகற்றித் துன்புறுத்துவது, கடுமையாகத் தாக்குவது என்று இன்னமும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல துயரங்களுக்கு ஆளாகின்றனர்.

தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளவர்கள் மீது, இதுவரை எந்த வழக்கும் போடப்படவில்லை. ஆனாலும் சிறையில் இருப்பவர்களைச் சந்திக்க குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்குத் தடை நீடிக்கிறது.

இவர்கள் மீது வழக்குப் போட்டு பிணையில் விடுதலை செய்ய வேண்டும் அல்லது இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணைக் கைதியாகவே வைத்திருப்பது சர்வதேச நீதி விதிகளுக்கும் சிங்கள நீதி விதிகளுக்கும் புறம்பானது.

தாய் மண்ணுக்காகப் போராடியவர்களைப் போர் முடிந்து இவ்வளவு காலமும் கொடுமைப்படுத்துவதை மனித உரிமை அமைப்புகளும் ஐ.நா-வும் கண்டித்து, அவசர நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

நிராயுதபாணிகளாக உள்ளவர்களுக்கு நிரந்தரத் தீர்வுக்கு உலக சமூகம் முயற்சிக்க வேண்டும். தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தைப் பற்றி தமிழக அரசியல் கட்சிகள் நாடெங்கும் பேச வேண்டும்.

இந்தக் கொடுமை வெளி உலகுக்குத் தெரிந்தால்தான், சிங்கள அரசு அவர்களைக் கொடுமைப்படுத்துவதை நிறுத்தும். தமிழர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கவும் வாய்ப்பு ஏற்படும் என்றார்.

முகாம்களில் சித்திரவதைகளை அனுபவித்து வரும் போராளிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது, அனைவரினதும் கடமை!

ஜூனியர் விகடன்
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved