.

Home » » கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் சிங்கக்கொடி விவகாரம் சர்ச்சையாக வெடிக்கலாம்?

கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் சிங்கக்கொடி விவகாரம் சர்ச்சையாக வெடிக்கலாம்?


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மே தினப் பேரணியில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கைத் தேசியக் கொடியான சிங்கக்கொடி ஏந்திய விவகாரம் தொடர்பாக சூடான விவாதங்கள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்கள் தொடர்பாக வெளியான அறிக்கைகள், அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஐ.தே.கவுடன் இணைந்து நடத்திய மேதினப் பேரணி உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேதினப் பேரணியில் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சிங்கக்கொடி ஏந்தியது தொடர்பாக, தமிழரசுக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோபமடைந்துள்ளதாகவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துடனான பேச்சுக்கள் குறித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலத் திட்டங்கள், தமது இலங்கைப் பயணம் தொடர்பாக இந்திய நாடாளுமன்றக் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை குறித்தும் இன்றைய கூட்டத்தில் விரிவாக ஆராயப்படவுதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சிங்கக்கொடி ஏந்தியது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா பொதுமன்னிப்புக் கோரியிருந்தார். ஆனால் சிங்கக்கொடி ஏந்தியதற்காக, தான் வருந்தவில்லை என்றும், பொதுமன்னிப்புக் கோர வேண்டிய அவசியம் இல்லை என்றும் இரா.சம்பந்தன் கூறியிருந்தார்.

இந்தநிலையில்,சிங்கக்கொடி விவகாரம் குறித்து இன்றைய கூட்டத்தில் சூடான விவாதங்கள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Share this article :

சிறப்பு செய்திகள்

 
Support : Copyright © 2011. Daily News Bit - Tamil News - All Rights Reserved