கனடா பொதுநலவாய நாடுகள் அமைப்பிலுள்ள நாடுகளில் முக்கியமானதொரு நாடாக இருப்பதால் கொழும்பில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்து கொள்வதைத் தவிர்ப்பதை விடுத்து கனடாவின் குரல் அந்த மாநாட்டில் தமிழர்களிற்காக ஒலிக்க வேண்டுமென புதிய ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மைக் சுளிவான் அவர்கள் கேட்டுக் கொண்டார்.
கனடிய மனித உரிமை அமைப்பு நடாத்திய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி கருத்தைத் தெரிவித்த மைக் சுளிவான் அவர்கள் தங்களின் கட்சி எதிர்க்கட்சி என்ற கோதாவில் என்னவென்ன அழுத்தங்களை கொடுக்க முடியுமோ அதனைச் செய்து வருகிறது என்றும்,
தங்களது கட்சிப் பாராளுமன்ற உறுப்பினராவுள்ள ராதிகா சிற்சபைஈசன் தங்களின் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு இலங்கை விவகாரத்தில் எவ்வாறு செயற்பட வேண்டுமென்பதற்கான ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கையில் மனிதவுரிமை மீறல்கள் தொடர்ந்து வருகின்றதென்றும் சர்வதேச நாடுகளின் கவனயீர்ப்பைப் பெறாமல் அது தொடர்ந்து செல்கிறது என்றும் தெரிவித்த மேற்படி பாராளுமன்ற உறுப்பினர், ஆப்கானிய அரசு மனிதவுரிமை மீறலைப் புரிந்த போது சர்வதேசம் போர் தொடுத்த போது, கனடா அந்தப் போரில் குதித்தது.
அதுபோலவே லிபியாவின் கடாபி அரசு மனிதவுரிமை மீறல்களைப் புரிந்த போது நாம் அங்கேயும் போரில் கனடா குதித்தது.
இலங்கைக்கும் மேற்படி இருநாடுகளிற்கும் இடையே வித்தியாசம் இருப்பதாக புதிய ஜனநாயகக் கட்சியோ அதன் பாராளுமன்ற உறுப்பினர்களோ கருதவில்லை.
கனடியப் பிரதமர் தான் சிறீலங்காவில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டிற்குச் செல்ல மாட்டேன் என அறிவித்தார். ஆனால் அதற்கும் மேலாகாச் செய்ய வேண்டியது பல உள்ளது எனத்தெரிவித்த மேற்படி உறுப்பினர்,
இலங்கையும் கனடாவைப் போல பொதுநலவாய நாடுகள் அமைப்பின் ஒரு கௌரவ அங்கத்தினராக இருப்பதோடு மாத்திரமல்லாம் அதன் மாநாட்டையும் நடத்துகிறது. மாறாக ஐ.நா.வில் அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டும்.
இராஜதந்திர வட்டாரங்களினூடாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட வேண்டும். இலங்கையை பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்தார்.
பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதன் மூலமே இலங்கை அரசு பொதுநலவாய நாடுகள் அமைப்பில் தொடர்ந்தும் அங்கம் வகிக்கத் தகுதியுள்ளதா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். அதனை ஆளும் கனடிய அரச கட்சி தனது கொள்கைகளை மாற்றுவதன் மூலமே சாத்தியம் எனத் தெரிவித்தார்.
கனடா முன்னைய காலங்களிலும், இப்போதும் உலக முடிவெடுக்கும் தலைமைகளில் மாற்றங்களைக் கொண்டுவரக்கூடிய ஒரு நாடாக காத்திரமான பங்கை வகிக்கிறது எனவும், எனவே இந்த நிலை தொடர கனடா காத்திரமான ஐக்கிய நாடுகள் சவை, பொதுநலவாய அமைப்பு, மற்றும் ஏனைய நாடுகளினூடான தொடர்புகளின் மூலம் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டுமெனவும் கேட்டுக கொண்டார்.
குறிப்பாக இலங்கையுடன் கனடா கொண்டுள்ள இராஜதந்திர உறவுகளின் மூலம் பலமான அழுத்தத்தைக் கொடுக்க முடியும் எனவும், இதற்கான அழுத்தத்தை தாங்கள் கனடிய கன்சவேட்டிவ் அரசிற்கு கொடுப்போம் எனவும் மேலும் தெரிவித்தார்.