ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக எழுப்பப்படும் எந்தச் சவாலையும் எதிர்கொள்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம். மனித உரிமை விடயங்கள் தொடர்பில் இலங்கையிடம் எழுப்பப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும் உரிய பதில் எம்மிடம் உள்ளது. அங்கு அனைத்தையும் வெற்றிகரமாக எதிர்கொள்வோம்.
இவ்வாறு சவால் விடுத்துள்ளார் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம.ஜெனிவாவில் கொண்டுவரப்படும் பிரேரணையை எதிர்கொள்ள அமைச்சர் மஹிந்த சமர சிங்க தலைமையிலான விசேட குழுவினர் ஏற்கனவே தயாராகி விட்டனர் எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சில இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்றை முன்வைப்பதற்கு திட்ட மிட்டுள்ளன. இந்தப் பிரேரணையைக் கண்டு இலங்கை ஒருபோதும் பயப்பிடவில்லை. மாறாக அதனை எப்படி எதிர்கொள்வது என்ற வியூகங்களை நாங்கள் வகுத்திருக்கிறோம். ஜெனிவாவில் அந்தப் பிரேரணைக்கு மிகச் சரியான பதிலை நாம் வழங்குவோம்.
நல்லிக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஜெனிவா கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப் போவதில்லை. ஆயினும் அறிக்கை தொடர்பில் சர்வதேசத்தினால் எழுப்பப்படும் கேள்விகளுக்கு நாம் அங்கு பதிலளிப்போம். மேற்கு நாடுகள் சிலவும் அரச சார்பற்ற நிறுவனமும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை விமர்சனம் செய்து வருகின்றன.
ஆயினும் அதில் அடங்கியுள்ள பல நல்ல விடயங்களை கண்டுகொள்ளவில்லை. நாம் என்ன செய்தாலும் அவர்களுக்குச் சந்தோசம் ஏற்படாது. அது எனக்குத் தெரியும். அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய இயலாது. உலக நாடுகளையும் அரச சார்பற்ற நிறுவனங்களையும் மகிழ்விப்பதற்காக நாம் ஒரு போதும் தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது. எமது மக்களின் நாட்டின் நலன்களைக் கருத்தில் கொண்டே நாம் தீர்மானங்களை மேற்கொள்வோம் என்றார் அவர்.